கண்டதேவி தேரோட்டம்.. 17 ஆண்டுகளுக்குப் பின் ஆடி அசைந்து உலா வந்த திருத்தேர்.. உற்சாகத்தில் மக்கள்

கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயிலில் இன்று (ஜூன் 21) நடைபெற்ற தேரோட்டத்தில் அனைத்து சமூகத்தினரும் இணைந்து ஒற்றுமையாக வடம் பிடித்து இழுத்தனர்.

Jun 21, 2024 - 17:01
கண்டதேவி தேரோட்டம்.. 17 ஆண்டுகளுக்குப் பின் ஆடி அசைந்து உலா வந்த திருத்தேர்.. உற்சாகத்தில் மக்கள்

சிவகங்கை: தேவகோட்டை அருகே கண்டதேவியில் சிவகங்கை தேவஸ்தானத்துக்கு பாத்தியப்பட்ட சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் உள்ளது. தென்னிலை, உஞ்சனை, செம்பொன்மாரி, இறகுசேரி ஆகிய 4 பகுதிகளைச் (நாடு) சேர்ந்த 150க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இங்கு வழிபட்டு வருகின்றனர்.17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.


தேவகோட்டை அருகே உள்ள கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் வெகுபிரபலமானது.இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் கேட்டை நட்சத்திர தினத்தன்றுதேரோட்டம் நடைபெறும். 1998ம் ஆண்டு தேரோட்டத்தின்போது தலித் மக்கள் வடம் பிடித்து தேர் இழுக்கககூடாது என்று பிற சமூகத்தினர் கூறியதால் பெரும் வன்முறை ஏற்பட்டு தேரோட்டம்பாதியில் நின்றது. இதைத் தொடர்ந்து அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தேரோட்டம் நடைபெறவில்லை.2001 மற்றும் 2002ம் ஆண்டுகளில் பலத்த பாதுகாப்புடன் தேரோட்டம்நடத்தப்பட்டது.

2003ல் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டதால் தேரோட்டம் நடைபெறவில்லை. கடந்த2004 மற்றும் 2005ல் பலத்த பாதுகாப்புடன் தேரோட்டம் நடந்தது.கடந்த 2006ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. நான்கு நாட்டார்கள் எனப்படும் உஞ்சனை ராமசாமி அம்பலம்,செம்பொன்மாரி ராமசாமி அம்பலம், பெரியகருப்பன் அம்பலம், ரமேஷ் அம்பலம்ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தனர்.இதையடுத்து தேர்வு செய்யப்பட்ட 36 தலித் சமூகத்தினர் வடம் பிடித்தனர். இதைத்தொடர்ந்து மற்ற அனைவரும் வடம் பிடித்து தேரை இழுக்கத் தொடங்கினர். இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பனும் கலந்து கொண்டு வடம்பிடித்தார். ஆனால் அவர் வடம் பிடிக்க சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பியதால்அவர் வடம் பிடிக்கவில்லை. 

இதனைத் தொடர்ந்து கும்பாபிஷேக திருப்பணிகளுக்காக மீண்டும் தேரோட்டம் நிறுத்தப்பட்டது.கடந்த 2012-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்ற பின்னர், தேர் பழுதானதாகக் கூறி, தேரோட்டத்தை நடத்தவில்லை. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன், புதிய தேர் செய்யப்பட்டது. ஆனால் தேர் வெள்ளோட்டம் நடத்தாமல் இருந்தது. மகா.சிதம்பரம் என்பவர் தொடர்ந்த வழக்கில் கடந்த 2020ஆம் ஆண்டு தேர் வெள்ளோட்டம் நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது. ஆனால் கொரோனாவால் வெள்ளோட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் நீதிமன்றம் உத்தரவுபடி பிப்ரவரி  11ஆம் தேதி தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. தேவஸ்தான ஊழியர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். இந்நிலையில் இக்கோயில் திருவிழா ஜூன் 13ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மேலும் தேரோட்டத்தில் அனைத்து சமூகத்தினரும் ஒற்றுமையாக வடம் பிடித்து இழுப்பது என முடிவு செய்யப்பட்டது.17 ஆண்டுகளுக்குப் பிறகு தேரோட்டம் நடைபெறுவதால் அனைவரும் ஆவலுடன் காத்திருந்தனர்.

ஆனி பௌர்ணமி தினமான இன்று தேரோட்டத்தை ஒட்டி காலை 6 மணிக்கு பிரியாவிடையுடன் சொர்ணமூர்த்தீஸ்வரர் பெரிய தேரிலும், பெரியநாயகி அம்பிகா சிறிய தேரிலும் எழுந்தருளினர். சப்ரத்தில் விநாயகர், முருகன், சண்டிகேஸ்வர் எழுந்தருளினர். காலை 6.35 மணிக்கு அனைத்து சமூகத்தினரும் வடம் பிடித்து ஒற்றுமையுடன் தேர் இழுத்தனர்.இந்த தேரோட்ட விழாவில் மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித், மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச் சந்திரன், கோட்டாட்சியர் பால்துரை, தேவதஸ்தான அறங்காவலர் மதுராந்தகி நாச்சியார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தென்மண்டல ஐஜி கண்ணன் தலைமையில் 3 டிஐஜிகள், 10 எஸ்பிகள், 12 கூடுதல் எஸ்பிகள், 25 டிஎஸ்பிகள், 80 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 3,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow