மதுரை சித்திரை திருவிழா.. மீனாட்சி திருக்கல்யாணமும்.. வைகையில் இறங்க வரும் கள்ளழகரும்.. காண கண் கோடி வேண்டுமே!
ஒவ்வொரு சித்ரா பவுர்ணமிக்கும் கள்ளழகர் வைகையில இறங்குறதை பார்க்கவே வண்டி கட்டிக்கிட்டு ஜனங்க மதுரைக்கு வருவாங்க. மீனாட்சி திருக்கல்யாணமும், சித்திரை தேரோட்டமும் முடிந்து வைகையில் கள்ளழகர் இறங்குவரை காண கண் கோடி வேண்டும். காலம் காலமாக மதுரையில் நடக்கும் இந்த திருவிழா பற்றி தெரிந்து கொள்வோம்.
திருமாலிருஞ்சோலை மகாவிஷ்ணுவின் மனதிற்கு பிடித்த திவ்ய தேசம். பாண்டிய நாட்டு வைணவ தலங்களில் சிறப்பான இந்த தலம் பல ஆழ்வார்களால் பாடப்பெற்றுள்ளது. அழகர்மலை அற்புதங்கள் நிறைந்த மலை. கங்கைக்கு நிகரான நூபுரா கங்கை தீர்த்தம் வற்றாமல் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த திவ்விய தேசத்தில் கருவறையில் மூலவராக பெருமாள் ஸ்ரீபரமசுவாமி கல்யாண சுந்தரவல்லி தாயார் சமேதராக காட்சி அளிக்கிறார். உற்சவர் அழகர், சுந்தரராஜ பெருமாள்.
கள்ளழகர் பெயருக்கு ஏற்றார் போல பலரது உள்ளங்களை கொள்ளை கொண்ட கள்வன்தான். இந்த அழகர் விக்ரகம் அபரஞ்சி என்ற உயர்ரக தங்கத்தினால் செய்யப்பட்டது. அழகர் விக்ரகத்துக்கு நூபுர கங்கை நீரால் மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது. பிற நீரால் அபிஷேகம் செய்தால் கறுத்து போயிரும் அதனாலதான் தினசரியும் நூபுரா கங்கையில மட்டும்தான் அபிஷேகம் பண்ணுவாங்க.
அபரஞ்சிங்கிறது தேவ லோகத் தங்கம். அதனாலத்தான் தேவலோகப் பெருமாளாக அழகர் சுந்தராஜ பெருமாளை பக்தர்கள் கும்பிடுறாங்க. அழகர் கோவிலுக்கு வந்து தன்னை தரிசிக்க முடியாத பக்தர்களுக்காக ஆண்டுக்கு ஒருமுறை மதுரைக்கு வந்து வைகையில எழுந்தருளி பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார் கள்ளழகர்.
இந்த வருஷம் சித்திரை திருவிழா மதுரையில தொடங்கிருச்சு.. மீனாட்சி அம்மன் கோயிலில நாளைக்கு பட்டாபிஷேகம். அதே நேரத்தில் அழகர் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேறப்போகுது. வைகை ஆற்றில் இறங்குவதற்காக அழகர் அதிர்வேட்டு முழங்க புறப்படுற அழகை பார்க்கவே ஆயிரம் கண் வேண்டும். கண்டாங்கி பட்டு கட்டி அதிர் வேட்டு முழங்க புறப்படும் கள்ளழகரை வழியெங்கும் மண்டகப்படியில கூப்பிட்டு மரியாதை செய்து அனுப்புவாங்க.
கள்ளழகரும் மெதுவா மதுரைக்கு வந்து சேர 2 நாள் ஆயிரும். மூன்று மாவடியில எதிர்சேவை விடியற்காலையில நடக்கும். சர்க்கரை கிண்ணத்தில தீபம் ஏற்றி கோவிந்தா.. கோவிந்தா என்று சொல்லி கும்பிடும் போது மேனியெங்கும் சிலிர்க்கும்.
ஒவ்வொரு வருஷமும் சித்திரை திருவிழா நடக்கிறப்ப ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளம்மா கழுத்தில மாலை சூடிக் கொடுத்த பின்னாடி அதை போட்டுக்கிட்டு கம்பீரமாக கள்ளழகர் தங்க குதிரை மேல உட்கார்ந்துக்கிட்டு வருவாரு பாரு அப்படி ஒரு அழகா இருக்கும். கள்ளழகர் அழகா, அந்த தங்கக் குதிரை அழகான்னு பார்க்கிற எல்லோருக்குமே மனசுக்குள்ள ஒரு பட்டி மன்றமே நடக்கும்.
ஆண்டாள் பூமாதேவியின் அம்சம் ஸ்ரீவில்லிபுத்தூர்ல துளசி வனத்தில அவதரித்து பெரியாழ்வார் கண்ணில் பட்டவர். கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழும் ஊர்னு சொல்வாங்க. சின்ன வயசுல இருந்தே அந்த கோதை தான் கழுத்தில் போட்டு அழகு பார்த்த மாலையைத்தான் பெருமாளுக்கு சூட்டுவாங்க. ஒருதடவை பெரியாழ்வார் அதை பார்த்து கோதையை கோவிச்சிக்கிட்டார். வேற மாலையை புதுசா போட்டப்ப அதை ரிஜெக்ட் செய்த பெருமாள் கோதை சூடிக்கொடுத்த மாலையைத்தான் மீண்டும் போட்டுக்கிட்டார்.
கடவுளை காதலித்து கணவனாக மனதில் நினைத்து உருகி அந்த ஸ்ரீரங்கன் திருவடி சேர்ந்தவர் ஆண்டாளம்மா. இன்னைக்கும் ஆண்டாளம்மா சூடிக்கொடுத்த மாலைதான் பெருமாளுக்கு போடுறாங்க. கள்ளழகருக்கு சித்திரை மாதமும், ஏழுமலையானுக்கு புரட்டாசி மாதமும் ஆண்டாள் அனுப்பி வைக்கிற மாலை ஸ்ரீ வில்லிபுத்தூர்ல இருந்துதான் போகுது.
ஆண்டாளம்மா மாலை அழகருக்கு மட்டுமல்ல திருப்பதியில புரட்டாசி பிரம்மோற்ஸவம் நடக்கிறப்ப கருட வாகன சேவையில தங்கமும் வைரமும் போட்டுக்கிட்டு மலையப்ப சுவாமி ஜொலிச்சாலும் ஆண்டாள் மாலையை சூடிக்கிட்டு வரும்போது அழகு அப்படியே அள்ளும். அதுக்கு உபகாராமாத்தான் ஆண்டாள் ரங்கமன்னார் திருக்கல்யாணத்துக்கு திருப்பதி வெங்கடாஜலபதி கோயில்ல இருந்து கல்யாண பட்டுப் புடவையும் சீர் வரிசையும் வரும். ஆண்டாளுக்கும் பெருமாளுக்கும் அப்படி ஒரு பந்தம் இருக்கு. கண்ணன் மீது காதல் கொண்டு கசிந்து உருகி அந்த ஸ்ரீரங்கநாதன் திருவடியை சேர்ந்தவராச்சே ஆண்டாளம்மா.
மதுரையில் சித்திரைத் திருவிழா நடக்குறப்ப ஒவ்வொரு வருஷமும் சித்ரா பவுர்ணமிக்கு முதல்நாள் ஆண்டாள் மாலை ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து பூஜைகள் முடிந்து வண்டியில் கிளம்பும். தல்லாக்குளம் பெருமாள் கோவிலில் தங்கி ஓய்வெடுக்கிற கள்ளழகர் நள்ளிரவில் திருமஞ்சனம் முடிந்த பின்னால் தங்க குதிரை வாகனத்திற்கு மாறுவார். அப்போது அவர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையைத்தான் அணிந்து கொண்டுதான் வைகையில் இறங்க கிளம்புவார். பலநூறு ஆண்டுகாலமாக நடந்து வரும் சம்பவம் இது. ஆண்டாள் மாலையை அணிந்து கொண்டு அப்படி ஒரு கம்பீரமாக தங்கக்குதிரை வாகனத்தில் வலம் வருவார் கள்ளழகர்.
அழகருக்கான ஆடைகள், அலங்காரப் பொருட்கள் எல்லாமே ஒரு பெரிய மரப்பெட்டியில இருக்கும். இந்தப் பெட்டிக்குள் சிவப்பு, வெள்ளை, பச்சை, மஞ்சள், ஊதான்னு பல நிறங்களில் பட்டுப்புடவைகள் இருக்கும். கோயிலின் தலைமைப் பட்டர் அந்தப் பெட்டிக்குள்ளே கைவிட்டு ஏதாவதொரு புடவையை எடுப்பார். அவர் கையில் எந்த கலர் புடவை கிடைக்குதோ அது கள்ளழகர் ஆற்றில் இறங்கும் போது அணிவிக்கப்படும்.
அழகர் எந்த வண்ணப் புடவை கட்டி ஆற்றில் இறங்குகிறாரோ அதற்கேற்ப அந்த வருடத்தில் நல்லது கெட்டது நடக்கும்கிறது பக்தர்களின் நம்பிக்கை. பச்சைப்பட்டு கட்டி வந்தால் நாடு செழிப்பாக இருக்கும். சிவப்புப் பட்டு கட்டிவந்தால் அந்த வருடம் போதிய விளைச்சலுமிருக்காது. நாட்டில் அமைதியும் இருக்காது. பேரழிவு ஏற்படும் என்கின்றனர்.
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் போது வெள்ளை மற்றும் ஊதாப்பட்டு கட்டி வந்தால் பெரிய அளவில எந்த பிரச்சினையும் இருக்காது. அழகர் மஞ்சள் பட்டு கட்டி வந்தால், அந்த வருடத்தில் மங்களகரமான நிகழ்வுகள் அதிகம் நடக்கும். இப்படி நம்பிக்கை இருப்பதாலதான் ஆற்றில் இறங்க வரும்போது அழகர் என்ன கலர் பட்டுடுத்தி வரப் போறாரோ?' அப்படின்னு ஒரு எதிர்பார்ப்பு இருக்கும்.
இந்த வருஷம் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதற்காக இன்னும் சில நாட்களில் மதுரைக்கு வரப்போகிறார்.. அழகரை காண மதுரை மக்கள் ஆர்வமாக இருக்கும் அதே நேரத்தில் நம்ம மதுரை மீனாட்சிக்கு நாளைக்கு பட்டாபிஷேகம் நடக்கப்போகுது. பட்டத்தரசியாக முடிசூடி திக் விஜயம் வரப்போறா தாயி மீனாட்சி. கயிலாயத்தில சொக்கரைப்பார்த்து சொக்கிப்போன மீனாட்சியை கல்யாணம் செய்துக்க சுந்தரேஸ்வரரா மாறி வருவார் சிவபெருமான்.
மீனாட்சி கழுத்தில வைரத்தாலி ஏறப்போற அதே நேரத்தில இங்கே சுமங்கலி பெண்கள் எல்லாம் புதுதாலி கட்டிக்கிட்டு மீனாட்சி சுந்தரேஸ்வரரை கும்பிடுவாங்க. மீனாட்சி சுந்தரேஸ்வரர் பிரியாவிடையோட தேர்ல ஏறி மாசி வீதியில வருவதை பார்க்க மொத்த மதுரையும் கூடி நிற்கும் பாருங்க.. பார்க்காதவங்க உடனே மதுரைக்கு கிளம்புங்க. மீனாட்சி திருக்கல்யாணம் மட்டுமில்ல கள்ளழகரையும் பார்த்துட்டு வரலாம்
What's Your Reaction?