பார்படாஸில் கடும் சூறாவளி... விமான நிலையம் மூடல்... நாடு திரும்ப முடியாமல் இந்திய வீரர்கள் தவிப்பு!

சூறாவளியால் பார்படாஸ் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அங்கு இருந்து புறப்படும் விமானங்களும், அங்கு வந்து சேரும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Jul 1, 2024 - 11:42
பார்படாஸில் கடும் சூறாவளி... விமான நிலையம் மூடல்... நாடு திரும்ப முடியாமல் இந்திய வீரர்கள் தவிப்பு!
இந்திய வீரர்கள்

பார்படாஸ்: பார்படாஸில் கடும் சூறாவளி வீசி வருவதால் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. இதனால் உலகக்கோப்பையை வென்ற இந்திய வீரர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய இந்திய அணி 2வது முறையாக டி20 உலகக்கோப்பையை கைப்பற்றியுள்ளது. வெற்றி கொண்டாட்டத்தில் திளைக்கும் இந்திய வீரர்கள் இன்று நள்ளிரவு பார்படாஸில் இருந்து இந்தியா வருகை தர இருந்தனர்.

மும்பை விமான நிலையத்தில் இந்திய வீரர்களுக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்க பிசிசிஐ திட்டமிட்டு இருந்தது. இந்நிலையில், பார்படாஸில் கடும் சூறாவளி வீசி வருவதால் இந்திய வீரர்கள் நாடு திரும்ப முடியாமல் சிக்கியுள்ளனர். 

அங்கு மணிக்கு 130 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசி வருவதுடன், கனமழையும் கொட்டி வருகிறது. இதனால் பார்படாஸ் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அங்கு இருந்து புறப்படும் விமானங்களும், அங்கு வந்து சேரும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

இது தவிர அங்குள்ள ஹோட்டல்கள், சுற்றுலா தலங்களும் மூடப்பட்டுள்ளன. பார்படாஸ் விமான நிலையம் மூடப்பட்டுள்ளதால் இந்திய வீரர்கள் ஹோட்டல் அறைகளில் முடங்கியுள்ளனர். பார்படாஸில் 4ம் கட்ட சூறாவளி வீசி வருகிறது. மிக கடுமையான காற்றுடன் அதீத கனமழை பெய்து வருவதால் அடுத்த 24 மணி நேரம் விமான நிலையம் திறக்கப்பட வாய்ப்பில்லை என்று தகவல்கள் கூறுகின்றன. 

இது குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, ''நாங்கள் அனைவரும் சூறாவளியில் சிக்கியுள்ளோம். நிலைமை சீரானபிறகு நாடு திரும்பி இந்திய வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்படும்'' என்று கூறியுள்ளார்.

பார்படாஸ் விமான நிலையம் மூடபட்டுள்ள நிலையில், இந்திய வீரர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பயிற்சியாளர்களை தனி விமானம் மூலம் இந்தியா அழைத்து வர ஜெய்ஷா முடிவு செய்துளளதாக தகவல் வெளியாகி உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow