'டிலைட்' பால் பாக்கெட்டில் இருந்தது புழு இல்லையாம்!.. விளக்கம் அளித்த ஆவின் நிர்வாகம்..

Feb 22, 2024 - 15:12
'டிலைட்' பால் பாக்கெட்டில் இருந்தது புழு இல்லையாம்!.. விளக்கம் அளித்த ஆவின் நிர்வாகம்..

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே, வாடிக்கையாளர் ஒருவர் வாங்கிய ஆவினின் டிலைட் பாலில் 'புழு' இருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவியது. இந்த வீடியோவை சுட்டிக்காட்டி பல்வேறு தரப்பினரும் ஆவின் தயாரிப்பின் தரத்தை குறித்து கேள்வி எழுப்பினார்கள். இந்த நிலையில், இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து, ஆவின் நிர்வாகம் விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், "கோவில்பட்டி அருகே வாடிக்கையாளர் ஒருவர் வாங்கிய டிலைட் பால் பாக்கெட்டில் புழு இருந்ததாக செய்திகள் வெளியானது. இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய பொது மேலாளர் மற்றும் துணைப்பதிவாளர் (பால்பதம்) அவர்களும் புகார் அளித்த கிராமத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டனர். 

அப்போது, சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் புகார் அளித்ததற்கான எந்த முகாந்திரமும் இல்லை என்பது கண்டறியப்பட்டது. அவர் முன்னிலையில் நடத்தப்பட்ட ஆய்விலும் எந்த ஒரு குறையும் இல்லை என்பதையும், பாலின் தரமும் நன்றாக இருந்ததும் அறியப்பட்டது. அந்தப் பாலை விநியோகம் செய்த மொத்த விற்பனையாளரிடம் விசாரனை மேற்கொண்ட போது வேறு எந்த வாடிக்கையாளரிடமிருந்து எவ்வித புகாரும் பெறப்படவில்லை எனத் தெரிவித்தார். 

எனவே ஆவின் பால் பாக்கெட் சம்பந்தமாக அளிக்கப்பட்ட புகாருக்கு எவ்வித அடிப்படை முகாந்திரமும் இல்லை என்பதையும் மற்றும் ஆவின் டிலைட் பால் பாக்கெட்டில் புழுக்கள் இருந்ததாக வெளியிடப்பட்ட செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்பதையும் ஆவின் நிர்வாகம் தெரிவித்துக்கொள்கிறது" எனக் கூறப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow