ஒரு மணிநேரத்தில் முடிந்த புதுச்சேரி பட்ஜெட் - "செல்லாது செல்லாது" என வெளியேறிய எதிர்கட்சிகள்...

Feb 22, 2024 - 14:46
ஒரு மணிநேரத்தில் முடிந்த புதுச்சேரி பட்ஜெட் - "செல்லாது செல்லாது" என வெளியேறிய எதிர்கட்சிகள்...

புதுச்சேரி சட்டப்பேரவையில், ரூ.4,634 கோடி மதிப்பிலான 5 மாத இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படாததை கண்டித்து திமுக-காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் பட்ஜெட் தாக்கலுக்கு மத்திய நிதித்துறை, உள்துறையிடம் அனுமதி பெற வேண்டும். மக்களவைத் தேர்தல் நெருங்குவதால் 2024-2025-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மார்ச் மாதம் தாக்கல் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது. தொடர்ந்து இடைக்கால பட்ஜெட் தாக்கலுக்காக புதுச்சேரி சட்டப்பேரவை இன்று (பிப்.22) கூடியது. 

அதன்படி சட்டப்பேரவை கூடியவுடன், புதுச்சேரி முன்னாள் அமைச்சர் கண்ணன், மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், பங்காரு அடிகளார், சங்கரய்யா, பாத்திமா பீவி, நடிகர் விஜயகாந்த் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. இதையடுத்து அரசு செலவினங்களுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதி பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார்.

ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான 5 மாத செலவினங்களுக்கு ரூ.4,634 கோடியில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டுக்கு குரல் வாக்கெடுப்பு நடத்தி அனுமதி வழங்கப்பட்டதாக சபாநாயகர் ஏம்பலம் செல்வம் அறிவித்தார். இந்நிலையில் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யாததை கண்டித்து எதிர்கட்சிகளான திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து இடைக்கால பட்ஜெட்டானது முழு நாள் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு மணி நேரத்திலேயே அவை காலவரையின்றி ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow