ஆவின் பால் பாக்கெட்டில் 'புழு'.. குற்றச்சாட்டை மழுப்பும் ஆவின் நிர்வாகம்..
தமிழ்நாடு அரசின் ஆவின் நிர்வாகத்தால் வழங்கப்பட்ட பால் பால்கெட்டுகளில் புழு இருந்த சம்பவம் இல்லத்தரசிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. எடையில் முறைகேடு, முறையான விநியோகம் இல்லை, கெட்டுப்போன பால் பாக்கெட் என பல குற்றச்சாட்டுகள் குவியும் நிலையில், தற்போது ஆவின் பாலில் புழு இருந்ததை கண்டு மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஆவின் நிறுவனத்தின் பால் தரமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் தான் பொதுமக்கள் அவற்றை வாங்குகின்றனர். பல வண்ணங்களில் விற்கப்படும் ஆவின் பால் பாக்கெட்டுகளை தமிழ்நாட்டில் பெரும்பாலான குடும்பங்கள் பயன்படுத்தி வருகின்றன. ஆனால், ஆவின் பாலில் நீர் கலக்கப்பட்ட ஊழல் வெளியான நிலையில், அவற்றைக் கொண்டு செல்லப் பயன்படும் பிளாஸ்டிக் டப்கள் கள்ளத்தனமாக விற்கப்படுவது பற்றிய தகவல்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக ஆவின் ஊழியர்களே கூறி வந்தனர்.
கொள்முதல் குறைவு மற்றும் முறைகேடு ஆகிய காரணங்களால் மாதாந்திர பால் கார்டுகள் விநியோகம் தொடர்ந்து குறைந்து கொண்டே வந்தது. இப்படி ஆவின் நிர்வாகம் பல்வேறு குளறுபடிகளில் சிக்கும் போதெல்லாம், அந்ததந்த ஆவின் கிளை அதிகாரிகள் தான் காரணம் எனக்கூறி அரசு அதிரடி நடவடிக்கைகளையும் எடுத்தது. இப்படி மாநிலத்தின் ஏதாவது ஒரு மாவட்டத்தில் இருந்து நாள்தோறும் புகார்கள் குவிந்து வரும் நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஆவின் டிலைட் பாலில் புழு மிதந்த சம்பவம் இல்லத்தரசிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கோவில்பட்டியை சேர்ந்த விவசாயியான லூர்துசாமி கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆவின் பால் உபயோகித்து வருகிறார். வழக்கம் போல் ஆவின் டிலைட் பால் பாக்கெட்டை வாங்கிய லூர்துசாமி, மனைவியிடம் கொடுக்கவே அதை பாத்திரத்தில் ஊற்றியபோது பாலில் புழு மிதந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதை வீடியோவாக பதிவு செய்த லூர்துசாமி சமூக வலைதளங்களிலும் பதிவிட்டு தனது ஆதங்கத்தை கொட்டியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டு குறித்து ஆவின் நிர்வாகம் எந்த விளக்கமும் அளிக்காத நிலயில், தரத்தை உயர்த்தி, பெரிய அளவிலான முறைகேட்டினை தடுத்து நிறுத்தினால் அரசுக்கு ஆண்டுக்கு பல கோடி நஷ்டம் குறையும். ஆயிரக்கணக்கான சாதாரண மக்கள், குறைந்த விலையில் தரமான பாலை பெறவும் வழியேற்படும். இந்த குற்றச்சாட்டுகளை தமிழக அரசு கருத்தில் கொண்டு, முறைகேட்டையும், தரமான விநியோகத்தையும் வழங்கி ஆவினுக்கு ஏற்பட்டிருக்கும் அவப்பெயரை நீக்கவேண்டும் என்பதே மக்களின் எண்ணமாக உள்ளது.
What's Your Reaction?