திருமணமான காதலனுடன் வாழ மறுத்த காதலி... தலையில் கல்லை போட்டு கொன்ற காதலன்!

Feb 21, 2024 - 21:20
திருமணமான காதலனுடன் வாழ மறுத்த காதலி... தலையில் கல்லை போட்டு கொன்ற காதலன்!

தன்னுடன் வாழ மறுத்த காதலியின் தலையில் கல்லைத் தூக்கிப் போட்டுக் கொன்றுவிட்டு தலைமறைவான காதலனை காவல்துறையினர் வலைவீசித் தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பொன்னாங்கண்ணிக்காடு ஆனந்தவல்லிபுரம் வாய்க்கால், தென்கரை மேற்கு பகுதியைச் சேர்ந்தவர்கள் சிவகுமார், கோவிந்தம்மாள் தம்பதி. இவர்களுக்கு நந்தகுமார்,  பிரகாஷ் என்ற இரு மகன்களும், சிவஜோதி என்ற மகளும் உள்ளனர். சிவக்குமார் அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் சமையலராகவும், கோவிந்தம்மாள் பேராவூரணியில் ஜவுளிக்கடை ஒன்றிலும் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில்,  மகன்கள் இருவரும் படித்து வரும் நிலையில், சிவஜோதி 7ம் வகுப்புடன் பள்ளியில் இருந்து நின்ற அவர், வீட்டிலேயே இருந்துள்ளார். 

இவர்கள் பொன்னாங்கண்ணிக்காடு பகுதிக்கு வருவதற்கு முன், பேராவூரணி அரசு மருத்துவமனை எதிரே உள்ள செக்கடித்தோப்பு பகுதியில் வசித்து வந்துள்ளனர். அப்போது, அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக இருந்த ராமநாதபுரத்தை சேர்ந்த காளீஸ்வரன் என்பருடன், சிவஜோதிக்கு பழக்கம் ஏற்பட்டு, நாளைடைவில் காதலாக மாறியது. இவர்களது காதலுக்கு பெண் வீட்டார் சம்மதம் தெரிவித்த நிலையில், காளீஸ்வரன் அடிக்கடி சிவஜோதி வீட்டிற்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது.  இந்நிலையில், ஓராண்டுக்கு முன் தன் சொந்த ஊர் சென்ற காளீஸ்வரன், தன் பெற்றோர் பார்த்த பெண்ணை திருமணம் செய்துகொண்டார். அதை மறைத்து, சிவஜோதியுடன் செல்போனில் தொடர்ந்து பேசி வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் காதலனுக்குத் திருமணமான தகவல் கேள்விப்பட்ட சிவஜோதி, காளீஸ்வரனுடன் கடுமையாக சண்டையிட்டதாகவும், அதன் பிறகு அவருடன் பேசுவதை முழுவதுமாக நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது. ஆனால், காளீஸ்வரனோ செல்போனில் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு பேராவூரணிக்கு சென்ற காளீஸ்வரன், சிவஜோதியின் வீட்டில் நுழைந்து, காதலியை தன்னுடன் வாழ வருமாறு அழைத்துள்ளார். அதற்கு சிவஜோதியும், குடும்பத்தாரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த காளீஸ்வரன் வீட்டில் இருந்த அம்மிக் கல்லை தூக்கி சிவஜோதியின் தலையில் போட்டுவிட்டு, தப்பியோடினார். 

இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய காளீஸ்வரனை வலைவீசி தேடி வருகின்றனர். காதலித்த இளம்பெண், தன்னுடன் குடும்பம் நடத்த வராததால் ஆத்திரமடைந்த திருமணமான காதலன் தலையில் கல்லைத் தூக்கிப் போட்டுக் கொன்ற சம்பவம் பேராவூரணி பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தியிருக்கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow