"நாங்களும் மனுஷங்கதான்.. துரத்தி துரத்தி அடிக்கிறாங்க".. நரிக்குறவர் இன மக்கள் வேதனை!
வடசேரி பேருந்துநிலையத்தில் வியாபாரம் செய்யக்கூடாது எனக் கூறி தங்களது விரட்டியடிப்பதாக நரிக்குறவர் இனமக்கள், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகாரளிக்க குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை மாவட்டம், வள்ளியூரை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இனமக்கள், கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி பேருந்து நிலையத்தில் ஊசி, பாசி உள்ளிட்ட பொருட்களை விற்று பிழைப்பு நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் வடசேரி பேருந்து நிலையத்தில் தங்களை வியாபாரம் செய்ய விடாமல் அடித்துத் துரத்துவதாக நரிக்குறவர் இன மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக நாகர்கோவிலில் உள்ள கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிப்பதற்காக சென்றனர். அப்போது பேசிய அவர்கள், தங்களை காவல்துறையினர், திருநங்கைகள் என அனைவரும் அடித்துத் துரத்துவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும், வடசேரி பேருந்து நிலையம் அருகே உள்ள ஆதரவற்றோர் முகாமின் நிர்வாகிகள் தங்களுக்கு பெரும் தொல்லை கொடுப்பதாகவும் கர்ப்பிணி பெண்ணை கூட தாக்குவதாகவும் நரிக்குறவர் இன மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக வடசேரி காவல்நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும் என அங்கிருந்த போலீசார் கூறிய நிலையில் அவர்கள், ஆட்சியரைப் பார்ப்பதற்காக வெளியிலேயே காத்திருந்தனர்.