சட்டென மயங்கி விழுந்த மன்சூர் அலிகான்.. விஷம் கொடுக்கப்பட்டதா? வெளியான பரபரப்பு தகவல்
திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் மன்சூர் அலிகான், தனக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
நடிகரும், இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தலைவருமான மன்சூர் அலிகான் வேலூர் மக்களவைத் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். அவருக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. பலாப்பழத்துடன் பரபரப்பாகவே தேர்தல் பிரசாரம் செய்து வந்தார் மன்சூர் அலிகான். அவரது அட்ராசிட்டிகள் வாக்காளர்களை கவர்ந்தது.
தேர்தல் பிரசாரம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் குடியாத்தம் பகுதியில் இறுதிக் கட்டப் பிரசாரத்தில் மன்சூர் அலிகான் ஈடுபட்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மயக்கம் மற்றும் நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனையடுத்து குடியாத்தத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து நேற்று மாலை மேல் சிகிச்சைக்காக சென்னை கே.கே.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், அதற்கு நடிகர் மன்சூர் அலிகான் மறுப்பு தெரிவித்துள்ளார்.
குடியாத்தம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட போது கட்டாயப்படுத்தி ஜூஸ் கொடுத்தனர். அதனை தொடர்ந்து மோர் கொடுத்தனர். அதனை குடித்ததால் மயக்கம், அடி நெஞ்சில் வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். இதையடுத்து மருத்துவர்கள் விஷ முறிவு மற்றும் நுரையீரல் வலிக்காக டிரிப்ஸ் கொடுத்தனர் என்று நடிகர் மன்சூர் அலிகான், தனது பிஆர்ஓ கோவிந்தராஜ் மூலம், செய்தி நிறுவனங்களுக்கு அறிக்கை கொடுத்துள்ளார்.
What's Your Reaction?