அதிமுகவை அழிக்க நினைத்தவர்கள் காணாமல் போவார்கள்...அண்ணாமலைக்கு இபிஎஸ் பதிலடி...

Apr 13, 2024 - 22:11
அதிமுகவை அழிக்க நினைத்தவர்கள் காணாமல் போவார்கள்...அண்ணாமலைக்கு இபிஎஸ் பதிலடி...

மக்களவைத் தேர்தலுக்கு பிறகு அதிமுக காணாமல் போகும் என அண்ணாமலை தெரிவித்துள்ள நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு யார் காணாமல் போவார்கள் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாக பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், தேனி தொகுதியில் அமமுக வேட்பாளர் டி.டி.வி.தினகரனை ஆதரித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது, மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு அதிமுக காணாமல் போகும் என அவர் கூறியிருந்தார். இதற்கு அதிமுக தலைவர்கள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் அரியலூர் தொகுதியில் பரப்புரையில் ஈடுபட்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலையின் பேச்சுக்கு  பதிலடி கொடுத்துள்ளார். பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ஜூன் 4-ம் தேதி யார் காணாமல் போவார்கள் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என தெரிவித்தார். அதிமுகவை அழிக்க நினைத்தால் அவர்கள் காற்றோடு காணாமல் போவதுதான் வரலாறு எனவும், அதிமுகவை எதிர்க்க நினைத்தவர்கள் எங்கே போனார்கள் என்றே தெரியவில்லை, அதில் சிலர் பலாப்பழத்தோடு திரிகிறார்கள் எனவும் கூறி ஓ.பன்னீர் செல்வத்தை சூசகமாக சாடினார்.


தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, தேர்தலுக்கு முன்பு ஒரு வாக்குறுதி, தேர்தலுக்குப் பின்னர் ஒரு திட்டம் என திமுக இரட்டை வேடம் போடுகிறது எனக் குற்றம்சாட்டினார். உணவுப் பொருட்களின் விலை உயர்வு, வறட்சி, வேலையின்மை உள்ளிட்டவை குறித்தெல்லாம் முதலமைச்சர் ஸ்டாலின் கவலைப்படாமல் தனது குடும்பத்தை பற்றியே கவலைப்படுகிறார் எனவும் விமர்சித்தார். மேலும், மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக இருந்தால் எளிதாக வெற்றி பெறலாம் என்று நினைத்த ஸ்டாலின், அதிமுக - பாஜக கூட்டணி இல்லை என்பதால் ஷாக் அடித்தது போல் உள்ளார் எனவும் சாடினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow