என்டிஏ கூட்டணிக்கு எதிர்ப்பு: அமமுக முதல் விக்கெட் அவுட், மாணிக்கராஜா திமுகவில் ஐக்கியம்
அதிமுக, பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து அமமுக துணை பொதுச்செயலாளர் மாணிக்கராஜா அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் தன்னை இணைத்து கொண்டுள்ளார்.
சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக கடந்த 21-ம் தேதி டிடிவி தினகரன் அறிவித்தார். அதிமுக பாஜக கூட்டணியில் அமமுக இணைவதாக கூறியதோடு, மத்திய அமைச்சர் பியூஷ் கோயலையும் சந்தித்து கூட்டணியை தினகரன் உறுதிபடுத்தினார். கடந்த சில மாதங்களாக எடப்பாடியை கடுமையாக தினகரன் விமர்சனம் செய்து வந்தார்.
திடீரென அந்தர் பல்டி அடித்து அதிமுக பாஜக கூட்டணியில் தினகரன் இணைந்தற்கு அமமுகவில் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதில் முதல் ஆளாக அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம் என தெரிவித்திருந்த அமமுக துணை பொதுச்செயலாளர் எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா திமுகவில் இன்று ஐக்கியமானார்.
அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்த அவர் தன்னை திமுகவில் இணைத்து கொண்டார். அவருடன் கன்னிக்குமாி, தென்காசி உள்ளிட்ட அமமுக மாவட்ட செயலாளர் மூவரும் திமுகவில் இணைந்தனர். இணைப்பிற்கு செய்தியாளர்களை சந்தித்த எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா, “தமிழகத்தில் நல்லாட்சி கொடுத்துக் கொண்டிருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்துள்ளோம். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் எதற்காக தொடங்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.
அப்படி இருக்கும்போது, 8 ஆண்டுகள் கஷ்டபட்டு வளர்த்த அமமுகவை மறுபடியும் பழைய நிலைக்கு அழைத்துச் சென்றுள்ளார். நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தும் அமமுக தலைமை கேட்கவில்லை. பலமுறை எடுத்துச் சொல்லியும் கேட்காமல் தினகரன் எடுத்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொண்டர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் விருப்பப்படி திமுகவில் இணைந்துள்ளோம்” என்றார்.
முன்னதாக அ.ம.மு.க. துணைப்பொதுச்செயலாளர் மாணிக்க ராஜா, கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் டி.டி.வி. தினகரன் அறிவித்துள்ளது குறிப்பிடதக்கது.
What's Your Reaction?

