டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி வரலாற்று சாதனை!

ஒருபக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுபக்கம் கிளைன் மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடினார். ஆனால் மறுபக்கம் ஸ்டோனிஸ் (11), டிம் டேவிட் (2), மேத்யூ வேட் (5), பேட் கம்மின்ஸ் (3) ஆகியோர் குல்புதீன் நைப் வேகத்தையும், ரஷித்கானின் சுழலையும் தாக்குப்பிடிக்க முடியாமல் வரிசையாக வெளியேறினார்கள்.

Jun 23, 2024 - 12:12
டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி வரலாற்று சாதனை!
ஆப்கானிஸ்தான் வெற்றி

கிங்ஸ்டவுன்: டி20 உலகக்கோப்பை 'சூப்பர் 8' சுற்று போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டிஸுல் நடந்து வருகிறது. தற்போது லீக் சுற்று ஆட்டங்கள் அனைத்தும் முடிவடைந்து, 'சூப்பர் 8' சுற்றுக்கு ஆட்டங்கள் தொடங்கி நடந்து வருகின்றன. 

இந்நிலையில், இந்திய நேரப்படி இன்று காலை 6 மணிக்கு நடந்த போட்டியில் ஆப்கானிஸ்தான்-ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி அதிரடி தொடக்கம் கொடுத்து ஆஸ்திரேலியவை மிரள வைத்தது.

தொடக்க வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் சிக்ஸர் மழை பொழிந்தார். மறுபக்கம் இப்ராஹிம் சத்ரான் அழகான ஷாட்கள் மூலம் பெளண்டரிகளை விரட்டியத்தார். ஆஸ்திரேலிய கேப்டன் மிட்ச்செல் மார்ஷ் பல்வேறு பவுலர்களை பயன்படுத்தி பார்த்தும் இந்த ஜோடியை பிரிக்க முடியவில்லை.

15.5 ஓவரில் ஸ்கோர் 118 ரன்கள் என வலுவான நிலையில் இருந்தபோது அதிரடி அரை சதம் அடித்த குர்பாஸ், 4 பெளண்டரி 4 சிக்ஸருடன் 49 பந்தில் 60 ரன் அடித்து அவுட் ஆனார். அதனை தொடர்ந்து இப்ராஹிம் சத்ரான் 6 பெளண்டரிகளுடன் 51 ரன்னில் உடனே ஆட்டமிழந்தார்.

ஆனால் கடைசி கட்டத்தில் அஸ்மத்துல்லா ஒமர்சாய் (2 ரன்), கரீம் ஜனத் (13), முகமது நபி (10) என அடுத்தடுத்து ஆட்டம் இழந்ததால் ரன் வேகம் குறைந்தது. ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழந்து 148 ரன்கள் எடுத்தது.

ஆஸ்திரேலிய அணி தரப்பில் பேட் கம்மின்ஸ் இந்த தொடரில் தொடர்ந்து 2வது முறையாக ஹாட்ரிக் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். கம்மின்ஸ் 3 விக்கெட்டும், ஜம்பா 2  விக்கெட்டும் வீழ்த்தினர். 

பின்பு சவாலான இலக்கை நோக்கிய களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 5 ஓவரில் 32/3 என தடுமாறியது. அதிரடி வீரர்கள் டிராவிஸ் ஹெட் ரன் ஏதும் எடுக்காமலும், டேவிட் வார்னர் 3 ரன்னிலும், மிட்ச்செல் மார்ஷ் 12 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.

ஒருபக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுபக்கம் கிளைன் மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடினார். ஆனால் மறுபக்கம் ஸ்டோனிஸ் (11), டிம் டேவிட் (2), மேத்யூ வேட் (5), பேட் கம்மின்ஸ் (3) ஆகியோர் குல்புதீன் நைப் வேகத்தையும், ரஷித்கானின் சுழலையும் தாக்குப்பிடிக்க முடியாமல் வரிசையாக வெளியேறினார்கள். 

பின்பு 6 பெளண்டரிகள், 3 சிக்ஸர்கள் விளாசிய மேக்ஸ்வெல் (41 பந்தில் 59 ரன்) அவுட் ஆனதும் ஆஸ்திரேலிய அணியின் தோல்வி உறுதியானது. 19.2 ஓவரில் 127 ரன்களுக்கு ஆல்அவுட் ஆன ஆஸ்திரேலியா 21 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

ஆப்கானிஸ்தான் தரப்பில் குல்புதீன் நைப்  4 ஓவரில் 20 ரன் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தி ஆட்டநாயகன் விருது வென்றார். நவீன் உல் ஹக் 4 ஓவரில் 20 ரன் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். இந்த உலகக்கோப்பையில் ஏற்கெனவே நியுசிலாந்துக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான், தற்போது ஆஸ்திரேலியாவுக்கும் மிகப்பெரும் அதிர்ச்சியை கொடுத்து சாதனை படைத்துள்ளது. 

உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தான் ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது இதுவே முதன்முறையாகும். இந்த வெற்றியை ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர். இந்த தோல்வியின்மூலம் அரையிறுதிக்கு தகுதி பெற இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற கட்டாயத்தில் ஆஸ்திரேலியா உள்ளது. ஆப்கானிஸ்தானும் அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow