சிஎஸ்கே-வை சிதறவிட்ட குஜராத்… சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்...

May 11, 2024 - 06:51
சிஎஸ்கே-வை சிதறவிட்ட குஜராத்… சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்...

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் 35 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றுள்ளது. 

10 அணிகள் பங்கேற்றுள்ள ஐபிஎல் தொடர் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மைதானங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (மே 10) அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் ஆகிய அணிகள் மோதின. டாஸை வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது. 

தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் களமிறங்கி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடிய நிலையில், சுப்மன் கில் 104 ரன்களும், சாய் சுதர்ஷன் 103 ரன்களும் அடித்து விளாசினர். இதையடுத்து டேவிட் மில்லர் 16 ரன்களும் ஷாருக்கான் 1 ரன்னும் எடுத்த நிலையில், 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 231 ரன்கள் குவித்தது. 

தொடர்ந்து 232 ரன்கள் இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான ரச்சின் ரவீந்திரா, ரகானே ஆகிய இருவரும் குஜராத் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தலா 1 ரன்னில் விக்கெட்டைப் பறிகொடுத்து ஏமாற்றம் அளித்தனர். அவர்களை தொடர்ந்து கேப்டன் கெய்க்வாட் ரன்கள் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். 

பிறகு டேரில் மிட்செல் மற்றும் மொயீன் அலி இருவரும் களமிறங்கி அதிரடியாக விளையாடினர். இதில், மிட்செல் 63 ரன்களும் மொயீன் அலி 56 ரன்களும் அடித்து விளாசினர். அடுத்தடுத்து விளையாடிய சிவம் துபே 21 ரன்களும், ஜடேஜா 18 ரன்களும், தோனி 26 ரன்களும் அடித்தனர். குஜராத் அணி தரப்பில் மொகித் ஷர்மா 3 விக்கெட்டுகள் மற்றும் ரஷித் கான் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 96 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது. இதனால் குஜராத் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்தப் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் குஜராத் அணி வீரர் சாய் சுதர்ஷன், ஐபிஎல் தொடரில் 1,000 ரன்களைக் கடந்துள்ளார். இதற்கு முன்பு 31 இன்னிங்சில் விளையாடி 1,000 ரன்கள் அடித்த சச்சினின் சாதனையை வெறும் 25 இன்னிங்சில் சாய் சுதர்ஷன் முறியடித்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 1,000 ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்து அசத்தியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow