மூன்று நாட்களுக்குள் 2 முறை ஹாட்ரிக்...தெறிக்கவிடும் பேட் கம்மின்ஸ்! புதிய சாதனை!

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இரண்டு முறை ஹாட்ரிக் கைப்பற்றிய 6வது வீரர் என்ற சிறப்பையும் பேட் கம்மின்ஸ் பெற்றுள்ளார். மலிங்கா, டிம் சவுதி, மார்க் பாவ்லோவிக், வசீம் அப்பாஸ் ஆகியோர் முன்னதாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இரண்டு முறை ஹாட்ரிக் சாதனை செய்துள்ளனர்.

Jun 23, 2024 - 12:28
மூன்று நாட்களுக்குள் 2 முறை ஹாட்ரிக்...தெறிக்கவிடும் பேட் கம்மின்ஸ்! புதிய சாதனை!
பேட் கம்மின்ஸ்

கிங்ஸ்டவுன்: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் ஹாட்ரிக் விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம், மூன்று நாட்களுக்குள் இரண்டு முறை ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றி, புதிய சாதனையைப் படைத்துள்ளார் பேட் கம்மின்ஸ். 

டி20 உலகக் கோப்பையில் சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தானுடன் மோதிய ஆஸ்திரேலியா, 21 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 148 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரஹ்மானுல்லா குர்பாஸ் 60 ரன்கள் குவித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ், 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

சிறப்பான தொடக்கம் அமைந்த போதும், மிடில் ஆர்டர் சொதப்பியதால் இறுதிக்கட்ட ஓவர்களில் அடித்து ஆட வேண்டிய நெருக்கடிக்கு ஆப்கானிஸ்தான் பேட்டர்கள் தள்ளப்பட்டனர்.

கம்மின்ஸ் வீசிய 18வது ஓவரின் கடைசி பந்தை தூக்கியடித்த ரஷித் கான், லாங் ஆனில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இன்னிங்ஸின் கடைசி ஓவரின் முதல் பந்தில் கரீம் ஜானட்டும் லாங் ஆனில் கேட்ச் கொடுத்து நடையைக் கட்டினார். 

கடைசி ஓவர் என்பதால் ரன் சேர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த குல்பதின் நைபும் அடுத்த பந்தை அடித்து விளையாடி, டீப் மிட்விக்கெட்டில் கேட்ச் கொடுத்து கம்மின்ஸின் ஹாட்ரிக் விக்கெட்டானார். முன்னதாக, ஆண்டிகுவாவில் நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான போட்டியிலும் கம்மின்ஸ் ஹாட்ரிக் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. 

இதன்மூலம் ஒரே டி20 உலகக்கோப்பையில் 2 முறை ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை கம்மின்ஸ் படைத்துள்ளார். மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இரண்டு முறை ஹாட்ரிக் கைப்பற்றிய 6வது வீரர் என்ற சிறப்பையும் பெற்றுள்ளார். மலிங்கா, டிம் சவுதி, மார்க் பாவ்லோவிக், வசீம் அப்பாஸ் ஆகியோர் முன்னதாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இரண்டு முறை ஹாட்ரிக் சாதனை செய்துள்ளனர். 

இந்த போட்டியில் நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றும் வாய்ப்பும் கம்மின்ஸுக்கு இருந்தது. ஆனால், கரோத்தேவின் கேட்சை டேவிட் வார்னர் தவறவிட்டதால் அந்த வாய்ப்பு பறிபோனது. சர்வதேச கிரிக்கெட்டில் அடுத்தடுத்த போட்டிகளில் ஹாட்ரிக் சாதனை படைத்த இரண்டாவது வீரர் கம்மின்ஸ் தான். முன்னதாக 1999-ல் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வாசிம் அக்ரம் இந்த சாதனையை செய்துள்ளார்.

பேட் கம்மின்ஸ் மூன்று நாட்களுக்குள் இரண்டு முறை ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றி, புதிய சாதனையைப் படைத்துள்ளார்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow