ஐபிஎல் 2024 : டெல்லிக்கு முதல் வெற்றி...சிஎஸ்கேவுக்கு முதல் தோல்வி..!

16 பந்துகளில் தோனி 37 ரன்கள் விளாசி ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஊட்டினார்.

Apr 1, 2024 - 05:52
Apr 1, 2024 - 05:54
ஐபிஎல் 2024 : டெல்லிக்கு முதல் வெற்றி...சிஎஸ்கேவுக்கு முதல் தோல்வி..!

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி டெல்லி அணி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. 

17-வது ஐபிஎல் தொடர் நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று(மார்ச்-31) இரவு விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 13-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸை வென்ற டெல்லி அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து களத்தில் இறங்கியது. 

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பிரித்வி ஷா மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் இணைந்து 93 ரன்கள் குவித்து அதிரடி காட்டினர். டேவிட் வார்னர் 52 ரன்களிலும், பிரித்வி ஷா 43 ரன்களிலும் விக்கெட்டுகளை இழந்தனர். தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் 51 ரன்கள் விளாசி ரன் ரேட்டை உயர்த்தினார். 

இதையடுத்து 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்திருந்தது. சென்னை அணி சார்பில் மதீஷா பதிரனா 3 விக்கெட்டுகளையும், முஸ்தாபிசுர் ரஹ்மான் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

தொடர்ந்து 192 ரன்கள் இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக விளையாடிய ருதுராஜ்  கெய்க்வாட் 1 ரன்னிலும், ரச்சின் ரவீந்திரா 2 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றத்தைக் கொடுத்தனர். பின்னர், ரஹானே மற்றும் டேரில் மிட்செல் அதிரடியாக பேட்டிங் செய்து அணிக்கு வலிமை சேர்த்தனர். ரஹானே 45 ரன்களும், மிட்செல் 34 ரன்களும் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். இறுதியாக சென்னை அணி 16.1 ஓவர்களுக்கு 120 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் தோனி களமிறங்கினார். தோனியும் - ஜடேஜாவும் பார்ட்னர்ஷிப் அமைத்து டெல்லி அணியின் பந்துகளை திசையெங்கும் பறக்கவிட்டனர். தோனி 16 பந்துகளில் 3 சிக்சர், 4 பவுண்டரிகள் என 37 ரன்களை குவித்தார். 

ஆனால், பரபரப்பான ஆட்டத்தின் முடிவில் சென்னை அணி 171 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதன் மூலம் டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் 2 போட்டிகளில் வென்ற சென்னை அணி, இந்த போட்டியில் தோல்வி அடைந்து, புள்ளிப் பட்டியலில் 2-ம் இடத்திற்கு பின் தங்கியுள்ளது. 

அதேநேரம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோற்றாலும் தோனியின் தரிசனம் கிடைத்தது என அந்த அணி ரசிகர்களின் கொண்டாட்டத்தில் குறைவில்லை.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow