அக்னி நட்சத்திரம்.. அனலை கக்கும்.. கோடை கால நோய்களில் இருந்து தப்பிக்க என்ன பரிகாரம் செய்யலாம்?

சென்னை: அக்னி நட்சத்திரம் இன்னும் இரு தினங்களில் ஆரம்பமாகப்போகிறது. சூரியன் அனலை கக்கும் இந்த நாட்களில் கோடைகால நோய்களில் இருந்து தப்பிக்க என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.

May 2, 2024 - 07:56
அக்னி நட்சத்திரம்.. அனலை கக்கும்..  கோடை கால நோய்களில் இருந்து தப்பிக்க என்ன பரிகாரம் செய்யலாம்?

 கோடை காலம் வந்தாலே தண்ணீர் பந்தலும் நீர் மோர் பந்தலும் வைத்து தானம் செய்வார்கள். தேர்தல் காலமாக இருந்தால் அரசியல்வாதிகள் தண்ணீர் பந்தல், ஐஸ் சர்பத், பழங்கள் என தானம் செய்வார்கள். தமிழ்நாட்டில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாகவே தண்ணீர் பந்தல் அரசியல் களைகட்டி வருகிறது. 

அக்னி நட்சத்திர காலத்தில் தண்ணீர், நீர் மோர், விசிறி உள்ளிட்ட பொருட்களை தானம் செய்வதன் மூலம் கோடை கால நோய் பாதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம் என ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது. 

தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகவே வெயில் சுட்டெரித்து வருகிறது. 10 நாட்களுக்கும் மேலாக அனல் காற்று வீசி வருகிறது. இனி அக்னி நட்சத்திர காலத்தில் சூரியன் உக்கிரமான கதிர்களை வீசி சுட்டெரிப்பார். மே 4 முதல் 29 வரை அக்னி நட்சத்திர காலத்தில் வெயில் வாட்டி எடுக்கும். இதனால் பலருக்கும் வெப்ப மயக்கம், வெப்ப பக்கவாதம் போன்ற நோய் பாதிப்புகள் உருவாகும்.

தலையில் படும் நேரடி வெயிலினால் மூளை நரம்புகள் பார்வை நரம்புகள் போன்றவை பாதிக்கப்பட்டு பித்தம் அதிகரித்த நிலையில் ஒற்றை தலைவலி மற்றும் பார்வை கோளாறுகள்,முடி கொட்டுதல் ஏற்படுகின்றது. கோடைகாலத்தில் பலருக்கும் அடிக்கடி சிறுநீரக கோளாறுகள், நீர் சுருக்கு ஏற்படுகின்றது. கொப்புளம், அம்மை, அக்கி போன்ற தோல் நோய்களை ஏற்படுத்தி விடுகிறது.

வெயில் காலத்தில் கோடை கால நோய்களான வேனல் கட்டி, அம்மை, கண் பாதிப்புகள் ஏற்படும்.  இந்த பாதிப்புகளில் இருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும் என்று ஜோதிடர்கள் கூறியுள்ளனர். கோடையில் ஏற்படும் நோய்களுக்கு முக்கூட்டு கிரகங்களான சூரியன்+புதன்+சுக்கிரன் ஆகிய மூன்று கிரங்களோடு செவ்வாயும் சேர்ந்து அதிக விளைவுகளை ஏற்படுத்தினாலும் அனேக வியாதிகளுக்கு சுக்கிரனே காரணமாக  அமைந்துள்ளது.   கோடை நோய்களை தவிர்க்க சுக்கிரனின் அம்சமான சுத்தமான குடிநீரை நிறைய குடித்துவந்தாலே பல பல வியாதிகளை தவிர்த்துவிடலாம் என ஆயுர்வேதமும் மருத்துவ ஜோதிடமும் கூறுகிறது. சுக்கிரனை காரகமாக கொண்ட இளநீரை கோடை காலத்தில் அதிகம் குடிக்கலாம். 

ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன், சூரியன், சுக்கிரன், புதன் எப்படி அமைந்துள்ளது என்பதைப் பொருத்தே சரும பிரச்சினையும் சரும நோய்களும் ஏற்படுகிறது. சந்திரன் மனதிற்கு காரகர். மன அழுத்தம் ஏற்பட்டால் சருமம் வறட்சியடைகிறது. இதனால் தோல்நோய்கள் எளிதாக ஏற்படுகிறது. தூக்கக் குறைபாடும் ஏற்படுகிறது. எனவேதான் கோடை காலத்தில் அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். இயற்கையான பழ ரசங்களை குடிக்கலாம்.

கோடை வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்பை தணிக்க வேப்பிலை, மஞ்சள் கொண்டு வீட்டை தூய்மைப்படுத்தவேண்டும். கோயில்களில் இறைவன், இறைவிக்கு திருமஞ்சனம், அபிஷேகம் செய்வதும் கண்குளிர காண்பதும் சிறப்பு. அம்மன் கோவில்களில் கூழ் வார்க்கலாம். அபிஷேகத்திற்கு இளநீர், தேன், சர்க்கரை,பூக்கள் போன்றவை வாங்கி கொடுக்கலாம் பாதிப்புகள் குறையும்

ஏழைகள், அந்தணர்கள் இயலாதவர்களுக்கு விசிறி, காலணி, குளிர்ந்த நீர், மோர், இளநீர், பானகம், தயிர்சாதம் கொடுப்பது விசேஷம். முடிந்தால் பறவைகள், ஆடு மாடு போன்ற விலங்குகளுக்கு குடிக்க தண்ணீர் வைக்கலாம்.  

உஷ்ணநோய் பாதிக்காமல் இருக்க, பூஜை அறையில் அரிசி மாவினால் சூரிய நவகிரக கோலமிட்டு, ‘அஸ்வத் த்வஜாய வித்மஹே! பாஸ ஹஸ்தாய தீமஹி! தன்னோ சூர்ய ப்ரசோதயாத்!’ என சூரிய காயத்ரீ சொல்லி வழிபடுவது சிறப்பு. பாஸ்கராய வித்மஹே! மஹத் யுதிகராய தீமஹி! தன்னோ ஆதித்ய ப்ரசோதயாத் என்று கூறி சூரியனை வழிபட பாதிப்புகள் நீங்கும்.

அக்னி நட்சத்திர காலத்தில் தான தருமம் செய்வதோடு முருகனையும், அன்னை மீனாட்சியையும் வழிபடலாம். பரணி நட்சத்திரத்திற்கு உரிய தேவதையான துர்க்கையையும்,  கார்த்திகை நட்சத்திரத்திற்கு உரிய அக்னி தேவன்,ரோகிணி நட்சத்திரத்திற்கு உரிய பிரம்மாவையும் வழிபடலாம். முருகன், சிவன் அக்னியின் அம்சம். மேலும் சீதளா தேவியை வணங்குவதால் அம்மை போன்ற நோய்கள் வராமல் தடுக்கப்படும். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow