"ஆனந்த ராகம்" இசைத்த பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்

தமிழ் திரை உலகின் பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார். அவருக்கு வயது 69. சென்னை அடையாறு, காந்தி நகரில் உள்ள உமா ரமணன் இல்லத்திலேயே இரவு 9.30 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.

May 2, 2024 - 07:37
May 2, 2024 - 07:38
"ஆனந்த ராகம்" இசைத்த பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்

பன்னீர் புஷ்பங்கள் திரைப்படத்தில் ஆனந்த ராகம் என்ற பாடலை பாடி திரை உலகில் பின்னணி பாடகியாக அறிமுகமானவர், உமா ரமணன்.  "நிழல்கள்" படத்தில் இளையராசாவின் இசையில் பாடும் சந்தர்ப்பம் கிடைத்தது. "பூங்கதவே தாழ் திறவாய்.. பூவாய் பெண் பாவாய்" என்ற கங்கை அமரனின் பாடலைத் தீபன் சக்கரவர்த்தியுடன் இணைந்து பாட இப்பாடல் இவரை முன்னணிக்கு இட்டுச்சென்றது.
தொடர்ந்து இளையராசாவின் இசையிலேயே நூற்றுக்கணக்கான பாடல்களைப் பாடினார். 

அவரது வித்தியாசமான குரல் 80களில் பிறந்த இசை ரசிகர்களுக்கு பிடித்தமானது. “எங்கிருந்தாலும் வாழ்க” படத்தில் மலேசியா வாசுதேவனுடன் இணைந்து “ஆசை நெஞ்சில்”, ஏவி.எம்.மின் புதுமைப் பெண் படத்தில் கே.ஜே.யேசுதாசுடன் இணைந்து “கஸ்தூரி மானே கல்யாணத் தேனே”, மகாநதி படத்தில் ஸ்ரீ ரங்க ரங்கநாதனின் பாதம் மங்கலம்.. தூரல் நின்னு போச்சு படத்தில் பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம் பாடல் இன்றைக்கும் பலருக்கும் பிடித்தமானதாக இருக்கிறது. 

கோவில் புறா படத்தில் அழகே தமிழே அழகிய, மெல்லப் பேசுங்கள் படத்தில் செவ்வந்திப் பூக்களில் செய்த வீணை, பகவதிபுரம் ரயில்வே கேட் படத்தில் செவ்வரளி தோட்டத்திலே உன்னெ நெனச்சேன், அன்பே ஓடி வா படத்தில் காதில் கேட்டதொரு பாட்டு, தென்றலே என்னைத் தொடு படத்தில் கண்மணி நீ வர காத்திருந்தேன் ஜன்னலைப் பாத்திருந்தேன் போன்ற ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.

“அரங்கேற்ற வேளை” படத்தில் “ஆகாய வெண்ணிலாவே அலை போல வந்ததேனோ , “கேளடி கண்மணி’” படத்தில் கே.ஜே.யேசுதாசுடன் சேர்ந்து நீ பாதி நான் பாதி கண்ணே”,டி.ராஜேந்தர் இசையில் ஒரு தாயின் சபதம் படத்தில் ராக்கோழி கூவையிலே ஏன் ராசாத்தி நீயும் வந்தே.. வித்யாசாகர் இசையில் “புதையல்” படத்தில் பூத்திருக்கும் வண்ணமே போன்ற பல்வேறு பாடல்களைப் பாடியுள்ளார்.
இவரது கணவர் “சம்சாரம் என்பது வீணை” படத்தில் “பாட வந்தேன் உன்னைத்தானே”போன்ற பல பாடல்களைப் பாடியவர்.

உடல் நலக்கோளாறால் பாதிக்கப்பட்டிருந்த உமா ரமணன் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். சென்னை அடையாறு, காந்தி நகரில் உள்ள உமா ரமணன் இல்லத்திலேயே இரவு 9.30 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது. ஆனந்த ராகம் இசைத்த உமா ரமணனின் குரல் அடங்கிப்போனது திரை இசை ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உமா ரமணனின் இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடைபெறும்.  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow