திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாகம் விழா.. தெய்வானை சுப்பிரமணிய சுவாமிக்கு ஊஞ்சலில் தாலாட்டு

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. வசந்த மண்டபத்தில் எழுந்தருளி சுப்பிரமணிய சுவாமி தெய்வானை பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

May 14, 2024 - 14:38
திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாகம் விழா.. தெய்வானை சுப்பிரமணிய சுவாமிக்கு ஊஞ்சலில் தாலாட்டு


முருகனின் அவதாரம் நிகழ்ந்த நாளாக வைகாசி விசாகம் திருவிழா முருகப்பெருமான் ஆலயங்களில் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. வைகாசி மாதத்தில் பௌர்ணமி நட்சத்திரத்துடன் விசாகம் நட்சத்திரம் இணைந்து வரும் நல்ல நாள் வைகாசி விசாகம் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 22ஆம் தேதி வைகாசி விசாகம் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. 

அறுபடை வீடுகளில் முதற்படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா நேற்று இரவு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.  இதனை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி தெய்வானை உற்சவ மண்டபத்தில் எழுந்தருளினார். அதனைத் தொடர்ந்து, சுப்பிரமணிய சுவாமி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாரதனை நடைபெற்றது. 

இதனைத் தொடர்ந்து வெட்டிவேர், விளாம்பச்சை வேர் உள்ளிட்ட மாலை அணிந்து தங்க ஆபரண அணிகலன்களுடன் சுப்ரமணியசுவாமி மண்டபத்தில் எழுந்தருளினார். சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜை நடைபெற்றது.  சுப்பிரமணிய சுவாமிக்கு வலது கையில் காப்பும் தெய்வானை அம்மனுக்கு இடது கையிலும் காப்பு கட்டப்பட்டு வைகாசி விசாகத் திருவிழா வெகு விமரிசையாக தொடங்கியது. அப்போது பக்தர்கள் அரோகராக முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து, சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து உற்சவர் மண்டபத்தில் இருந்து தெய்வானையம்மனுடன் புறப்பட்ட சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் திருவாச்சி மண்டபத்தை சுற்றி வந்து வசந்த மண்டபத்தில் தெய்வானை சமேதராக எழுந்தருளினர்.

வசந்த மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மனுடன் ஊஞ்சலில் அமர்ந்து ஊஞ்சல் உற்சவசேவை நடைபெற்றது. பின்னர் சுப்பிரமணியசாமி தெய்வானை மீண்டும் உற்சவர் மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர். இதனையொட்டி சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. 

விழாவையொட்டி தினம்தோறும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மனுடன் பல்வேறு அலங்காரங்களில் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலிப்பார். திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் ஆலயத்தில் வைகாசி விசாகம் விழா  காப்பு கட்டுதல் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow