மேஷம் to ரிஷபம்.. இடம்பெயர்ந்தார் குரு பகவான்..பக்தர்கள் சிறப்பு வழிபாடு

மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு குரு பகவான் இடம் பெயர்ந்ததையொட்டி தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் பக்தர்கள் சிறாப்பு வழிபாடு நடத்தினர்.

May 2, 2024 - 07:57
மேஷம் to ரிஷபம்.. இடம்பெயர்ந்தார் குரு பகவான்..பக்தர்கள் சிறப்பு வழிபாடு

குரு பார்க்க கோடி நன்மை என சாஸ்திரங்கள் கூறுகிறது. அதன்படி குரு பகவான் நேற்று மாலை 5:19 மணிக்கு மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார்.  குரு பெயர்ச்சியையொட்டி, தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற குரு பகவான் தலங்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்றன. குரு பெயர்ச்சி சிறப்பு பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்து வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் பழூரில் உள்ள நவக்கிரக கோயிலில் பால், தயிர், தேன், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் குருபகவானுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்த்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

குருப்பெயர்ச்சியையொட்டி புதுச்சேரி அருகே மொரட்டாண்டியில் அமைந்துள்ள 27 அடி உயர விஸ்வரூப சனீஸ்வர பகவான் ஆலயத்தில் 12 உயர குருபகவானுக்கு 1,008 லிட்டர் பாலாபிஷேகம் மற்றும் 30 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

மயிலாடுதுறை மாவட்டம் வதான்யேஸ்வரர் ஆலயத்தில் குரு அனுக்கிரஹ ஸ்தலமான ஸ்ரீமேதா தட்சிணாமூர்த்தி சன்னதியில் குருப்பெயர்ச்சியையொட்டி பஞ்சமுக அர்ச்சனை, பஞ்சமுக தீபாரதனை நடைபெற்றது. அப்போது தங்க கவச அலங்காரத்தில் காட்சியளித்த  தட்சிணாமூர்த்தியை பக்தர்களுக்கு வழிபட்டு சென்றனர்.

சீர்காழியில் உள்ள சட்டைநாதர் கோயிலில் குருப்பெயர்ச்சியையொட்டி சிறப்பு யாகம், அபிஷேகங்கள், மகா தீபாராதனைகள் நடைபெற்றது. இதில் தருமபுரம் ஆதீன குருமகா சன்னிதானம் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பட்டமங்களம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் குருப்பெயர்ச்சியையொட்டி  தட்சணாமூர்த்தி வெள்ளி அங்கியுடன் சந்தனக் காப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். 

இதே போல், குரு பெயர்ச்சியின் தாக்கத்தால் பரிகார ராசிகளான ரிஷபம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்களும் பரிகாரம் செய்து குரு பகவானை வழிபட்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow