வேளாண் பட்ஜெட் உழவர்களுக்கு ஏமாற்றத்தையே தரும் - கடுமையாக சாடிய ராமதாஸ்
தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட், உழவர்களுக்கு ஏற்றம் தராது, ஏமாற்றத்தையே தரும் என்றும் உழவர்கள் நலனைக் காப்பதில் தமிழக அரசு தோற்று விட்டதை காட்டுகிறது என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வேளாண் விளைபொருட்களுக்கு உரிய விலை வழங்கப்பட வேண்டும் என்ற விவசாயிகளின் எதிர்பார்ப்பு இந்த ஆண்டும் நிறைவேற்றப்படவில்லை. தமிழ்நாட்டில் பழங்கள், காய்கறிகள் உள்ளிட்ட அனைத்து வேளாண் விளைபொருட்களுக்கும் கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சியாக இருந்த போது திமுக வலியுறுத்தி வந்தது. ஆனால், ஆளுங்கட்சியாக வந்தவுடன் அந்த வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டு விட்டது. உழவர்களின் வருவாயைப் பெருக்கவோ, பாசனப் பரப்பை அதிகரிக்கவோ எந்த திட்டமும் இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்படவில்லை. பண்ருட்டியில் பலா மதிப்புக்கூட்டு மையம் அமைக்கப்படும் என்று 2021 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால், அதில் எந்த முன்னேற்றமும் எட்டப்படாத நிலையில், நடப்பாண்டிலும் அதே அறிவிப்பு மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது.
உழவர்களின் துயரங்களைப் போக்குவதற்கான பெருந்திட்டங்கள் எதுவும் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை. நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்காமல் வேளாண்துறை மானியக் கோரிக்கையை வேளாண் நிதிநிலை அறிக்கையாக தாக்கல் செய்வதால் எந்த பயனும் இல்லை. கடந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு அரசாணைகள் மட்டும் தான் வெளியிடப்பட்டுள்ளனவே தவிர ஒரு திட்டம் கூட செயல்படுத்தப்படவில்லை. வேளாண் நிதிநிலை அறிக்கை என்பது தமிழகத்திற்கு புதியது. அதனால், முதல் 3 நிதிநிலை அறிக்கைகளில் தடுமாற்றங்கள் இருந்தால் அதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், நான்காவது அறிக்கையும் பயனற்ற ஆவணமாக இருப்பது உழவர்கள் நலனைக் காப்பதில் தமிழக அரசு தோற்று விட்டதையே காட்டுகிறது" என தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?