"எனக்கும் அழுகை வரும்; நானும் அழுவேன்": மனம் திறந்த குடியரசு தலைவர்

Feb 20, 2024 - 18:45
"எனக்கும் அழுகை வரும்; நானும் அழுவேன்": மனம் திறந்த குடியரசு தலைவர்

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, மத்திய அமைச்சர் ஸ்மிருதிக்கு கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி பேட்டி அளித்திருந்தார். இந்த நேர்காணலின் போது நாட்டின் மிக உயர்ந்த அரசியலமைப்பு பதவிக்கான தனது பயணத்தை அவர் பகிர்ந்து கொண்டார்.

நேர்காணலில், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தனது குழந்தை பருவ நினைவுகளிலிருந்து பொது வாழ்க்கை வரையிலான நினைவுகளை பகிர்ந்துக் கொண்டார். நிகழ்ச்சியை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பகிர்ந்து கொண்ட கருத்துக்கள் குறித்து பார்ப்போம். 

அமைச்சர் ஸ்மிருதி இரானி: ஒரு சாதாரண கிராமத்து பெண்ணாக இருந்த நீங்கள், குடியரசு தலைவராக ராஷ்டிரபதி பவனில் அமர்வீர்கள் என்று கனவு கண்டீர்களா? இந்த உணர்வு எப்படி உள்ளது?

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு: "இந்திய ஜனாதிபதி ஆவது எனது கனவாக இருந்ததில்லை. நான் ஒரு சாதாரண பெண்ணாக தான் இருந்தேன். கிராமத்தில் உள்ள மற்ற மாணவர்களைப் போலவே நானும் இருந்தேன். சிறுவயதில் கிராமத்தில் இருந்த மற்ற குழந்தைகளுடன் விளையாடுவேன். நாங்கள் பள்ளிக்குச் செல்வோம். சில சமயம் யாருடைய தோட்டத்திலோ அல்லது பண்ணையிலோ மாம்பழங்களையும் கொய்யா பழங்களையும் திருடுவோம். சிறுவயதில் எல்லாமே சாதாரண குழந்தைகளைப் போலவே இருந்தது. நாங்கள் ஏரிகளில் மணிக்கணக்கில் நீந்துவோம். ஒரு இளம் பெண்ணாக, நான் இந்தியாவின் குடியரசு தலைவராகவோ அல்லது பெரிய அதிகாரியாகவோ ஆக வேண்டும் என்று கனவு கண்டதில்லை. அது எங்கள் கற்பனைக்கு அப்பாற்பட்டது. நான் நினைத்தெல்லாம், 'நாம் நல்ல கல்வியைப் பெற வேண்டும், ஏதாவது நல்ல வேலையைப் பெற வேண்டும் என்பதே."

அமைச்சர் ஸ்மிருதி இரானி: நீங்கள் கூறியது போல, தங்களுடைய வாழ்க்கை மிகவும் கடினமான ஒன்றாக இருந்துள்ளது. நீங்கள் வளர்ந்த சூழல் முற்றிலும் வேறுபட்ட சூழலாகும். அத்தகைய சூழலில் வளர்ந்த உங்களுக்குள் 'நன்றாக படித்து, நல்ல வேலைக்கு செல்ல வேண்டும்' என்ற எண்ணம் துளிர்ந்தது எப்படி?

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு: அதற்கு காரணம் எனது பாட்டி தான். எனது கிராமத்திலிருந்து 60 முதல் 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜாம்ஷெத்பூரில் வசித்துவந்த எனது பாட்டியின் காரணமாக நான் படித்து ஏதாவது ஒரு வேலையைப் பெற வேண்டும் என்ற லட்சியத்தை வளர்த்துக் கொண்டேன். என் பாட்டி அதிகம் படிக்கவில்லை. ஆனால் கல்வி, மக்களின் வாழ்க்கையில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை அவர் அறிந்திருந்தார். இதனால் என்னை கல்வி கற்கச் சொன்னார். ஒரு பெண்ணாக நான் அதிக போராட்டத்தை எதிர்கொள்வேன் என்றும், அதனால் நான் கல்வி கற்க வேண்டும் என்றும் அவர் என்னிடம் சொன்னார். என் கல்வியுடன், வீட்டு வேலைகளையும் கற்க வேண்டும் என்று அவர் என்னிடம் சொன்னார்.

அமைச்சர் ஸ்மிருதி இரானி: நம் வீட்டில் பெயர் வைத்தல் என்பது நமது தாய், தந்தை தான் வைப்பார்கள். ஆனால் தங்களை பொறுத்தவரை தங்களுக்கு இந்த பெயரை வைத்தது தங்களுடைய ஆசிரியராமே. அதுகுறித்து பகிர முடியுமா?

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு: நம் சமூகத்தில், முதல் குழந்தையாக ஒரு பெண் குழந்தை பிறந்தால் அவளுடைய பாட்டியின் பெயரைத்தான் வைப்பார்கள். அதுவே, முதல் குழந்தையாக ஒரு ஆண் குழந்தை பிறந்தால், தாத்தாவின் பெயரையே பெயரிடுவார்கள். உடல் இறக்கலாம் ஆனால் பெயர் அழியாமல் இருக்க வேண்டும் என்று மக்கள் நினைந்தார்கள். அதேபோல் தான் எனக்கும் ஆரம்பத்தில் என் பாட்டியின் பெயர் வைக்கப்பட்டது. எனக்கு எனது குடும்பத்தினர் 'துர்கி' என்று பெயரிட்டனர். எங்கள் ஆசிரியர் ஒருவர் பக்கத்து மாவட்டத்தில் இருந்து பள்ளிக்கு வருவது வழக்கம். அவருக்கு அந்தப் பெயர் பிடிக்கவில்லை. பிறகு துர்கி பெயரில் இருந்து 'டி'-யை வைத்து எனக்கு திரௌபதி என்று பெயர் சூட்டினார். ஆசிரியர் வைத்தது சரியாக தான் இருக்கும் என்று கூறிய எனது தந்தை, இந்த பெயரே எனக்கு இருக்கட்டும் என்று கூறினார். அதுவே எனது பெயராக மாறியது.

அமைச்சர் ஸ்மிருதி இரானி: நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கணவரையும், இரண்டு பிள்ளைகளையும் இழந்து கடினமான ஒரு சூழலில் இருந்து மீண்டுள்ளீர்கள். அத்தகைய ஒரு சூழலில் இருந்து வெளியில் வர மன வலிமை எங்கிருந்து வந்தது?

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு: இங்குள்ள எல்லோரும் என் சிறந்த பக்கங்கள் குறித்து மட்டும் தான் கேட்க ஆர்வம் காட்டுகின்றனர். என் கடின காலத்தை கேட்க யாரும் விரும்புவதில்லை. நானும் சாதாரண மனுஷி தான். எனக்கும் அழுகை வரும். நானும் அழுவேன். நான் நிறைய சிந்திப்பேன். யாராலும் என் நிலையை புரிந்துக் கொள்ள முடியவில்லை. இதில் இருந்து வெளியில் வர நிறைய வழிகளை தேடினேன். நல்ல விஷயங்களையே தேடினேன். இறுதியில் ஒருவழியை கண்டுப்பிடித்தேன். நான் மன அழுத்தத்தில் இருந்த போது யோகா  மற்றும் தியானம் செய்ய சொன்னார்கள்.

வாழ்க்கையில் செயல்பாடுகள் நேர்மறையாக இருக்க வேண்டும். எண்ணங்கள் நேர்மறையாக இருக்க வேண்டும். அதிகமாகச் சிந்தித்து துக்கத்தில் சிக்கிக் கொள்வது, அதை நிவர்த்தி செய்வதற்கான சரியான வழி அல்ல. வெற்று மனம் உங்களுக்கு அதிக பிரச்னைகளை கொண்டு வரும். யோகா மற்றும் தியானம், நல்வழி நடத்தும். உங்கள் சுக, துக்கம் இரண்டும் உங்கள் கையில் தான்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow