கனிம வளத்துறை டெண்டர் முறைகேடு... சென்னையில் வளைத்த சிபிஐ அதிகாரிகள்.. அதிரடி சோதனை
சத்தீஸ்கர் கனிமவள டெண்டர் முறைகேடு தொடர்பாக சென்னையில், ஓய்வு பெற்ற கனிம வளத்துறை அதிகாரி வீட்டில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
சென்னை பெரம்பூர் நெடுஞ்சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இளவரசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டில் இன்று ( ஏப்ரல் 8) காலை சிபிஐ அதிகாரிகள் 6 பேர் திடீர் சோதனை நடத்தினர். சத்தீஸ்கர் மாநிலத்தில் பொது மேலாளராக பணியாற்றிய இளவரசன், கடந்த 2019ஆம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அவர் பணியாற்றிய காலத்தில் கனிமவள துறையில் தனியார் நிறுவனங்களுக்கு டெண்டர் விடப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கனிமவளத்துறை டெண்டர் முறைகேடு வழக்கில் பொது மேலாளராக இருந்த இளவரசனுக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்து சிபிஐ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். மேலும், இளவரசன் மற்றும் அவரது மனைவி சாந்தி ஆகிய இருவரையும் சிபிஐ அலுவலகம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
முழுமையான விசாரணைக்கு பிறகே சத்தீஸ்கர் மாநில கனிமவளத்துறை டெண்டரில் என்ன மாதிரியான முறைகேடு நடந்தது? டெண்டர் முறைகேட்டில் யார் யார் ஈடுபட்டுள்ளனர்? இதில், பொது மேலாளராக பணியாற்றிய இளவரசனுக்கு தொடர்பு உள்ளதா? என்பது உள்ளிட்டவை குறித்து முழுமையான தகவல்கள் தெரியவரும் என சிபிஐ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
What's Your Reaction?