தந்தை, அண்ணனை இழந்து, வறுமையில் உழன்ற ஆகாஷ் தீப்.. யார் இவர்?
இந்தியாவின் 313-வது வீரராக அறிமுகமாகியிருக்கும் ஆகாஷ் தீப் கடந்து வந்த பாதை இந்திய இளைஞர்களுக்கு உத்வேகமளிக்கும் கதை என்பதில் மாற்று கருத்து இல்லை.
ராஞ்சி டெஸ்டில் தனது அபார பந்துவீச்சின் மூலம் இங்கிலாந்து அணிக்கு பெரும் சவக்குழி பறித்துக் கொண்டிருக்கிறார் அறிமுக வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப். அவருடைய பந்துவீச்சை கணிக்க முடியாமல் இங்கிலாந்து பேட்டர்கள் தட்டுத்தடுமாறி வருகின்றனர். இந்தியாவின் நாயகனாக உருமாறியிருக்கும் ஆகாஷ் தீப், அவ்வளவு எளிதாக இந்த உயரத்துக்கு வந்துவிடவில்லை. யார் இந்த ஆகாஷ் தீப்? பார்ப்போம்...
பீகாரில் சசராம் என்ற ஊரில் ஓர் ஏழைக்குடும்பத்தில் பிறந்தவர் ஆகாஷ் தீப். சிறுவயதில் இருந்தே ஆகாஷுக்கு கிரிக்கெட் மீது உயிர்.ஆனால், குடும்ப சூழலையும் ஆகாஷின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்ட அவருடைய தந்தை மகனின் கனவுக்கு முட்டுக்கட்டை போட்டார்.
இதைத் தொடர்ந்து, குடும்ப பாரத்தை சுமப்பதற்காக மேற்கு வங்க மாநிலம் துர்காபூருக்கு வேலை தேடிச் சென்றார்.அங்கு, தனது மாமா கொடுத்த ஊக்கத்தில் மீண்டும் கிரிக்கெட் மீது பார்வையைத் திருப்பினார். துர்காபூரில் ஓர் அகாடமியில் சேர்ந்து, தனது வேகத்தின் மூலம் அங்கிருந்த பயிற்சியாளர்களை வியப்பில் ஆழ்த்தினார்.
கிரிக்கெட்டில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிக் கொண்டிருக்கும் போது, விதி ஆகாஷ்தீப் வாழ்க்கையில் விளையாடியது. பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட ஆகாஷ் தீப்பின் தந்தை உயிரிழந்தார். தந்தை தவறிய இரண்டு மாதத்திற்குள் அண்ணனையும் பறிகொடுத்தார்.
குடும்பத்தில் அடுத்தடுத்து இரண்டு பேரை இழந்ததால் ஆகாஷ் தீப்பின் குடும்பம் மீண்டும் வறுமையில் தள்ளப்பட்டது. தாயின் வறுமையைப் போக்கும் விதமாக கிரிக்கெட்டை மூன்று ஆண்டுகளுக்கு மறந்துவிட்டு வேலைக்கு சென்றார் ஆகாஷ் தீப்.
ஆகாஷ், கிரிக்கெட்டை மறந்து விட்டாலும், கிரிக்கெட் ஆகாஷை மறக்கவில்லை. மீண்டும் துர்காபூருக்கு திரும்பியவரை, கிரிக்கெட் உலகம் வாரி அணைத்துக் கொண்டது. அங்கிருந்து கொல்கத்தா சென்றவர், தனது உறவினரின் வீட்டில் தங்கி பெங்கால் அணியில் தனது வாய்ப்பைத் தேடினார்.
முதலில் அண்டர் 23 அணியில் இடம்பெற்ற ஆகாஷ் தீப், 2019-ல் முதல் தரப் போட்டியில் அறிமுகமானார். பின்னர், 2022-ல் ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணியில் இடம்பெற்று நாடறிந்த கிரிக்கெட் முகமாக மாறினார்.
இந்தியாவின் 313-வது வீரராக அறிமுகமாகியிருக்கும் ஆகாஷ் தீப் கடந்து வந்த பாதை இந்திய இளைஞர்களுக்கு உத்வேகமளிக்கும் கதை என்பதில் மாற்று கருத்து இல்லை.
What's Your Reaction?