நீலகிரியில் போட்டியா?: மத்தியமைச்சர் எல்.முருகனின் ரிப்ளை!

நீலகிரியில் யார் வேட்பாளர் என்பதை கட்சி மேலிடம்தான் முடிவு செய்யும்

Nov 27, 2023 - 12:31
Nov 27, 2023 - 20:23
நீலகிரியில் போட்டியா?: மத்தியமைச்சர் எல்.முருகனின்  ரிப்ளை!

நீலகிரியில் நான் போட்டியிடுகிறேனா? இல்லையா? என்பதை மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

விடிஞ்சா கல்யாணம்! அப்படிங்கிற மாதிரி இந்தியாவில் அத்தனை கட்சிகளும் பரபரப்பாய் அரசியல் செய்ய துவங்கியுள்ளன.காரணம், இன்னும் வெகு சில மாதங்களில் தேசிய அரசியல் திருவிழாவான நாடாளுமன்ற தேர்தல் வர இருக்கிறது.இதில் எந்த கட்சியின் தலைமையில், எந்த கட்சியெல்லாம் கூட்டணி? எனும் பரபரப்பு ஒரு புறம் இருக்கும் நிலையில், எந்த மத்திய இணையமைச்சருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும்? எந்த எம்.பி.க்கு மீண்டும் சீட் கிடைக்கும்? என்பதுதான் மிகப்பெரிய பரபரப்பே. அதிலும் விஐபி எம்.பி.க்கள் பற்றிய அலசல்களுக்கும், விமர்சனங்களுக்கும் பஞ்சமே இல்லை. 

அப்படித்தான் மத்திய மீன்வளம் உள்ளிட்ட துறைகளின் இணை அமைச்சராக இருப்பவரும், ராஜ்யசபா வழியே அந்தப் பதவியில் அமர்ந்தவருமான தமிழகத்தின் எல்.முருகனும் அலசப்படுகிறார்.

கடந்த ஒரு வருடமாகவே அவர் நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் அடங்கும் கூடலூர், ஊட்டி, குன்னூர், மேட்டுப்பாளையம், பவானிசாகர் மற்றும் அவிநாசி எனும் ஆறு சட்டசபை தொகுதிகளுக்குள் வளைய வந்து மக்கள் பணி செய்வதாலும், மத்திய அரசின் திட்டங்களை துவக்கி வைப்பதாலும் ‘நீலகிரியின் பாஜக வேட்பாளர் இவர்தான்’ என்று பிராண்ட் ஆகியுள்ளார். 

மேலும் பாஜகவின் செயல்தலைவரான நட்டா கடந்த ஒரு வருடத்துக்கு முன்பே தனது தேர்தல் பிரசார பயணத்தை துவக்கினார்.அதுவும் எங்கிருந்து தெரியுமா? இதே நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு உள்  இருந்துதான். மேட்டுப்பாளையம் அருகே நடந்த பொதுக்கூட்டத்தில், முருகனை அருகில் அமர்த்தியபடிதான் பாஜக அரசின் சாதனைகளை விளக்கி, ‘இந்த நல்லாட்சி மீண்டும் தொடர வாய்ப்பு கொடுங்கள்’ என்றார். கூடவே நீலகிரி தொகுதியில் நமக்கு வெற்றி மட்டுமே கிடைக்க வேண்டும்! என்றார் இதே முருகனை பார்த்தபடி. அதன் மூலமும் முருகன் தான் வேட்பாளர் என்பது  மக்கள் வரையில் கிட்டத்தட்ட உறுதியானது. 

நீலகிரியில் முருகன் முழு வீச்சில் களமிறங்குவதை பார்த்து தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. இரண்டு கட்சிகளுமே ஷாக் ஆகியுள்ளன.காரணம் கடந்த 5 ஆண்டுகளாய் இங்கே எம்.பி.யாக இருக்கும் ராசா அப்படியொன்றும் பெரிய அளவில் மக்களுக்கு நல்லது பண்ணவில்லை! மேலும் அவர் இந்து சாஸ்திரங்களை தொடர்ந்து விமர்சனம் பண்ணி வருவது நீலகிரி தொகுதி இந்து மக்களுக்கு கடும் மன வலியை உருவாக்கியுள்ளது.

இது தி.மு.க.வுக்கு பெரிய சவாலாக உள்ளது.இந்த நிலையில், மத்திய அமைச்சர்! எனும் மிகப்பெரிய அஸ்திரத்துடன் முருகனின் அரசியல் மூவ்மெண்ட்ஸால் அதிர்ந்து போயுள்ளன இரண்டு பெரிய திராவிட கட்சிகளும்.சூழல் இப்படியிருக்கும் நிலையில், தற்போது முருகனிடம் ‘நீங்கள்தான் நீலகிரி வேட்பாளரா?’ என்று கேட்கப்பட, அதற்கு அவர் “நீலகிரியில் யார் வேட்பாளர் என்பதை கட்சி மேலிடம்தான் முடிவு செய்யும். மத்திய அமைச்சர்கள் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு தொகுதியை தேர்வு செய்து, அதில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். அதன்படி நான் நீலகிரியில் பணியாற்றி வருகிறேன். வேட்பாளர் யாராகவும் இருக்கலாம்” என்று சாதுர்யமாக பதில் தந்திருக்கிறார். 

-ஷக்தி 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow