ஜி.எச்-ல் மின்தடை:வென்டிலேட்டர் இயங்காமல் இறந்த பெண்
நாங்கள் என்ன செய்வது. நீங்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம் தான் இது குறித்து கேட்க வேண்டும் என மருத்துவர் கூறுவதாக உறவினர்கள் வேதனை
திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் மின்சாரம் இல்லாததால் வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு நோய்களுக்கு அம்மாவட்ட மக்கள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா பகுதியை சேர்ந்த அமராவதி (50). இவர் நுரையீரல் பிரச்னைக்காக இரண்டு நாட்களாக அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.நுரையீரல் பிரச்னை என்பதாலும் மூச்சு திணறல் ஏற்படும் என்பதாலும் இவருக்கு வென்டிலேட்டர் மூலமாக சுவாசம் செலுத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இன்று மதியம் திடீரென அரை மணி நேரத்திற்கு மேலாக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் மின்சாரம் தடைபட்டது.இதனால் அமராவதிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு வென்டிலேட்டர் இயங்காமல் அவர் உயிரிழந்தார் என அவருடைய உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இது குறித்து உறவினர்கள் இறந்துபோன அமராவதி என்ற பெண்ணிற்கு சிகிச்சை அளித்த மருத்துவரிடம் கேட்டபோது, அதற்கு நாங்கள் என்ன செய்வது. நீங்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம் தான் இது குறித்து கேட்க வேண்டும் என தெரிவித்ததாக வேதனை தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
What's Your Reaction?