அமித் ஷா ரோடு ஷோ மீண்டும் கேன்சல்.. காரைக்குடி வருகை ரத்தானது ஏன்?
பாஜக கூட்டணி வேட்பாளர் தேவநாதனை ஆதரித்து மத்திய அமைச்சர் அமித் ஷா நாளைய தினம் காரைக்குடியில் நடத்த இருந்த ரோடு ஷோ திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளதால் இறுக்கட்ட பிரச்சாரத்தில் அரசியல் கட்சித்தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தேசிய தலைவர்கள், பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக அரசியல் களத்தில் அனல் பறக்கிறது. சென்னை தி. நகரில் கடந்த 9ஆம் தேதி நடந்த ரோடு ஷோவில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி வாக்கு சேகரித்தார். வேலூர், மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். இவரைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர் அமித் ஷாவும் நாளைய தினம் தமிழகம் வர உள்ளார்.
சிவகங்கை, மதுரை, கன்னியாகுமரி தொகுதிகளில் அவர் பாஜக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட உள்ளார்.
இதில், சிவகங்கை மக்களவைத் தொகுதி பாஜக கூட்டணி வேட்பாளர் தேவநாதன் யாதவை ஆதரித்து அமித் ஷா நாளை காரைக்குடியில் ரோடு ஷோவில் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
மதுரைக்கு நாளை பிற்பகல் 3 மணிக்கு வருகை தரும் அமித்ஷா அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சிவகங்கை சென்று காரைக்குடியில் ரோடு ஷோ மூலம் பிரசாரம் செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டது. சிவகங்கை பாஜக வேட்பாளர் தேவநாதனை ஆதரித்து இந்த ரோடு ஷோ நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
அதன்படி, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் இருந்து கார் மூலம் பெரியார் சிலை பகுதிக்கு வந்து, அங்கிருந்து அண்ணாசிலை வரை அமித் ஷா ரோடு ஷோவை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இதற்காக காவல்துறை தரப்பில் ஒத்திகை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. இந்நிலையில், அமித் ஷா காரைக்குடியில் நடத்த இருந்த ரோடு ஷோ நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக இன்று கட்சி தலைமை அறிவித்துள்ளது.
அமித் ஷா ரோடு ஷோ நிகழ்ச்சி, தொடர்ந்து மூன்றாவது முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளதால், பாஜக தொண்டர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. முக்கியமாக, பாஜக கூட்டணி வேட்பாளர் தேவநாதன் மீது 525 கோடி ரூபாய் நிதி மோசடி குறித்து காங்கிரஸ் கட்சியினர், காவல்துறையில் புகார் அளித்தனர். இதன் மூலம் அவர் அரசியல் களத்தில் தொடர்வாரா, இல்லையா என்ற சந்தேகம் ஏற்பட்டு வரும் நிலையில், தற்போது காரைக்குடி பிரச்சாரமும் ரோடு ஷோவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதேசமயம், அமித் ஷாவின் நிகழ்ச்சி நிரலில் காரைக்குடி வருகையும் ரோடு ஷோ மட்டுமே ரத்து செய்யப்பட்டுள்ளது. மற்ற நிகழ்ச்சிகளில் எந்த மாற்றம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. புதுக்கோட்டை செல்லும் அமித்ஷா திருமயம் கோட்டை பைரவரை வழிபாடு செய்வார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
What's Your Reaction?