ஆளுநரின் மனம் குளிர்வதற்காக பொன்முடியின் துறை மாற்றம் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் 

துரைமுருகனை தள்ளி வைத்துவிட்டு உதயநிதியை முன்னுக்கு கொண்டு வருவதைப் பார்ப்பதற்கு எதிர்க்கட்சியாக இருந்தாலும் எங்களுக்கே இதயம் சுக்கு நூறாக நொறுங்குகிறது.

Sep 30, 2024 - 17:07
ஆளுநரின் மனம் குளிர்வதற்காக பொன்முடியின் துறை மாற்றம் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் 

மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், வாரிசு அரசியல் என்று சொன்னால் மக்களுக்கு தெரியவில்லை. குடும்ப அரசியல் என்றால் மக்களுக்கு தெரியவில்லை. தமிழ்நாட்டு மக்கள் மிகவும் பொறுமைசாலி. வாரிசு அரசியல் என்று சொன்னால் ஜனநாயகத்துக்கு அது பேராபத்து. அப்பா, தாத்தா, மகன், பேரன், கொள்ளு பேரன் என சாசனம் எழுதி வைத்தால் மக்கள் எதற்காக உழைக்க வேண்டும்.

திமுக மூத்த அமைச்சர் துரைமுருகன் எத்தனை முறை சிறை சென்றுள்ளார். எத்தனை முறை மாற்றுக்கட்சியினர் தங்கள் கட்சிக்கு அழைத்த போதெல்லாம், நான் திமுகவில் தான் இருப்பேன் என்று கூறியுள்ளார். அவரை தள்ளி வைத்து விட்டு உதயநிதியை முன்னுக்கு கொண்டு வருவதைப் பார்ப்பதற்கு எதிர்க்கட்சியாக இருந்தாலும் எங்களுக்கே இதயம் சுக்கு நூறாக நொறுங்குகிறது. ஆனால் ஆளுங்கட்சியாக இருக்கும் நிர்வாகிகளுடைய இதயம் எடுத்து சிதறி இருக்கும்.

உதயநிதி நேற்று முன்தினம் திரைப்பட நடிகர், நேற்று சட்டமன்ற உறுப்பினர், அடுத்த நாள் அமைச்சர், மறுநாள் துணை முதலமைச்சர் தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை அவ்வாறு நடந்ததில்லை.உதயநிதி அரசியலில் எப்போது வந்தாரோ அப்போதிலிருந்து திமுக வெற்றிக்கு மேல் வெற்றி. அதற்கு முன்னால் திமுக வெற்றி பெறவில்லையா?  உதயநிதி விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின்பு தான் தமிழ்நாட்டிலே விளையாட்டுதுறை இருப்பதை உலகத்திற்கு தெரிகிறது என்று துணை முதல்வர் ஆக்கியதற்கு  புதிய விளக்கம் கூறுகிறார்.

உங்கள் பிள்ளையை துணை முதல்வர் ஆக்குவதற்கு உங்களிடத்தில் மெஜாரிட்டி இருக்கிறது என்கின்ற காரணத்தினாலே இன்றைக்கு இரண்டு மூத்த அமைச்சர்களுக்கு இலாகா மாற்றப்பட்டுள்ளது. இன்னொரு அமைச்சர் துறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் .மூத்த அமைச்சர் பொன்முடி ஏன் உயர்கல்வித்துறையில் இருந்து வனத்துறைக்கு மாற்றப்பட்டார்.அந்த ரகசியம் என்ன? அவர் கருணாநிதி காலத்தில் இருந்து உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தார். அவர் ஆளுநரை அவமரியாதையோடு பேசினார், சட்டமன்றத்திலே பதிவு இருக்கிறது. அவர் தொடர்ந்து ஆளுநரை இகழ்ந்து பேசினார். மேலும், ஆளூநர் பங்கேற்கும் பட்டமளிப்பு விழாவை புறக்கணித்தார். உதயநிதி பதவியேற்பு விழாவில் உயர்கல்வித்துறையில் பொன்முடி தொடர்ந்தால் ஆளுநர் பதவியேற்பு விழாவிற்கு அனுமதிக்க மாட்டார் என்ற அடிப்படையிலேயே, அவரின் மனம் குளிர்வதற்காக நீங்கள் பொன்முடியின்  துறையை மாற்றி உள்ளீர்கள். இதேபோல் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் விடுவிக்கப்பட்டுள்ளார். 

அப்போது அதிமுகவை அடிமை என்று கூறினார்கள். ஆனால் இப்போது யார் அடிமை என்று தெரிகிறது. பிரதமர் மோடி பற்றி சமூகவலைதளங்களில் அவமரியாதையாக கருத்துக்களை பதிவிட்ட காரணத்தால் மனோ தங்கராஜ் ஒரு நிமிடம் கூட திமுக அமைச்சரவையில் இருக்க கூடாது என்று தலைநகர் டெல்லி சென்றபோது கூறப்பட்டுள்ளது. மனோதங்கராஜை அமைச்சரவையில் இருந்து விடுவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் அடிமை. என் பிள்ளை, என் குடும்பம் ஆட்சி அதிகாரத்திற்கோ, கட்சிக்கோ வர மாட்டார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்று கூறியது இன்றும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது என்று கடுமையாக சாடினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow