மறைந்தார் ஆம்பூரின் அன்னை தெரசா ‘ஆலிஸ் ஜி பிராயர்’

வட தமிழகத்தில் மக்களுக்கான சேவையில் 57 ஆண்டுகள் மக்களுக்காக சேவையாற்றிய அமெரிக்கப் பெண்ணான ஆலிஸ் ஜி பிராயர் தனது 87 வயதில் நேற்று மறைந்தார். 

Oct 1, 2024 - 13:17
மறைந்தார் ஆம்பூரின் அன்னை தெரசா ‘ஆலிஸ் ஜி பிராயர்’
ஆலிஸ் ஜி பிராயர்

ஆலிஸ் ஜி பிராயர் குறித்து அவ்வளவாக ஊடகங்களில் செய்தி வந்ததில்லை. ஏனென்றால் அவர் அதை விரும்பியதில்லை. அமெரிக்காவிலிருந்து மிஷினெரிக்காக நாகர்கோவில் வந்த ரிச்சர்ட் ஹென்றி பிராயரின் மகளாக 1938ம் ஆண்டு நாகர்கோவிலில் பிறந்தார் ஆலிஸ் பிராயர். அவர்களின் குடும்பம் பின்னர் அமெரிக்காவுக்கு சென்று விட்டாலும் ஆலிஸ் பிராயருக்கு தன் தந்தையைப் போல மிஷினெரியாக விரும்பி இந்தியாவுக்கு வந்தார். மருத்துவக் கல்வி பயின்று மருத்துவரான ஆலிஸ் பிராயர் Community health service - பணிக்காக 1968ம் ஆண்டு  இந்தியாவுக்கு விமானத்தில் வந்தார். 

சில நாட்களில் தமிழ் மொழி கற்க வேண்டியதன் அவசியம் உணர்ந்து மதுரைப் பல்கலைக்கழகத்தில் ஓராண்டு தமிழ் படித்தார். 1969ம் ஆண்டில் இருந்து அவரே ஜீப்பை ஓட்டிக்கொண்டு வட தமிழகத்தின் கிராமங்களுக்குச் சென்று பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குத் தடுப்பூசிகள் போட்டார். கல்வி அதிகம் இல்லாத பெண்களிடம்  சத்து குறைபாடு, ஊட்டச்சத்தின் அவசியம், தாய்ப்பால் கொடுத்தலின் நன்மைகள், 
நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார். 

போலியோ, அம்மைகள், கக்குவான் இருமல், இரணல் ஜன்னி,  போன்ற நோய்கள் தலை விரித்தாடிய காலத்தில் அவைகளை தடுக்க தடுப்பூசி போட்டவர் ஆலிஸ். ஊட்டச்சத்து விழிப்புணர்வு குறித்த பயிற்சியினைத் தனியே பயின்று சத்து மாவினைத் தயாரித்து தாய் சேய்க்கு கொடுத்து வந்தார். இந்த சத்து மாவு மக்களிடம் மிகவும் பிரபலம் அடைந்தது. 

அந்த மாவிற்கு மக்கள் வைத்திருக்கும் பெயர் "மிசிமா"  "மிசிமாவு". குழந்தை இன்மையால் மக்கள் துன்புறுகையில் 1990களில் அதற்கான மருத்துவத்தினைத் தொடங்கினார் ஆலிஸ். அன்று முதல் கடந்த வாரம் வரை அவரது மருத்துவ சேவை தொடர்ந்தது. ஆயிரக்கணக்கானோருக்கு தன் வாழ்நாளில் சிகிச்சை அளித்துள்ளார். 

ஆலீஸுக்கு முன்பாக மக்கள் சேவையா, குடும்ப வாழ்க்கையா என்ற கேள்வி வருகையில் மக்கள் சேவைக்காக அவர் தனது திருமண வாழ்க்கைக்குள் செல்லாமல் தவிர்த்தார். ஆம்பூரைச் சுற்றி உள்ள ஏழை எளிய மக்கள் ஒவ்வொரு மாதமும் முதல் வியாழக்கிழமைகளில் ஆலிஸைத் தேடி வருவார்கள் அவர்கள் ஒவ்வொருவருக்கும் சிறிய பண உதவிகள் தருவார். 

ஆண்டுக்கு ஒரு முறை டிசம்பர் மாதத்தில் அந்த மக்களுக்கு குளிராடைகளைப் பரிசளிப்பார். சுமார் நாற்பது ஆண்டுகளாக இதனைச் செய்து வந்தார் டாக்டர் ஆலிஸ். ஆடு கோழிகள் பூனை மயில் வான்கோழி நாய்கள் மரங்கள் செடிகள் என எல்லா உயிர்களையும் வளர்த்தார் ஆலிஸ்.  தன்னை போலவே
அந்த எல்லா உயிர்களையும் நேசித்தார் ஆலிஸ். மனிதர்களைப் போலவே விலங்குகளையும் நேசித்தார். இவரது சேவைக்காக இவர் ஆம்பூரின் அன்னை தெரசா என அப்பகுதி மக்களால் அழைக்கப்படுகிறார். 
57 ஆண்டு காலம் ஆம்பூரில் வாழ்ந்து சேவையாற்றிய ஆலிஸ் நேற்று மறைந்தார். அவரது உடல் நாளை மறுதினம் (03.10.2024) அன்று காலை முதல் ஆம்பூர் பெதஸ்தா மருத்துவமனையில் வைக்கப்பட்டு மாலையில் அவர் வாழ்ந்த லேடீஸ் பங்களா வளாகத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow