ஜாதகம் முதல் CALL DETAILS வரை... கறுப்பாடுகளை களையெடுக்க ரெடியான செ.பாலாஜி!

பணமோசடி வழக்கில் ஜாமினில் வெளியில் வந்துள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி, சிறையில் இருந்தபோது தனக்கு எதிராக செயல்பட்ட நபர்களை களையெடுக்க ரெடியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Oct 1, 2024 - 12:17
ஜாதகம் முதல் CALL DETAILS வரை... கறுப்பாடுகளை களையெடுக்க ரெடியான செ.பாலாஜி!

அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்தபோது வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடியில் ஈடுப்பட்டதாகக் கூறி செந்தில்பாலாஜிமீது அமலாக்கத்துறையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் திமுக ஆட்சிக் காலத்தில் கைதாகி, 471 நாட்கள் சிறைவாசம் அனுபவித்துவிட்டு ஜாமினில் வெளியே வந்துள்ளார். வெளியில் வந்த கையோடு மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்று தன்னுடைய பவரை நிரூபித்துள்ளார் செந்தில்பாலாஜி. 

இந்தளவிற்கு செந்தில்பாலாஜிக்கு திமுக தலைமை முக்கியத்துவம் கொடுப்பதற்கு காரணம், கொங்கு மண்டலத்தில் திமுகவின் கிங் மேக்கராக செந்தில்பாலாஜி உருவெடுத்துவிட்டதுதான். அதற்கு சிறந்த உதாரணம் மக்களவை தேர்தல். சிறையில் இருந்துக் கொண்டே நண்பர் சங்கர் ஆனந்த் மூலம் கரூரை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் செந்தில்பாலாஜி. 

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டபோது செந்தில்பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு இதய அறுவை சிகிச்சை நடந்தது. அப்போது, ‘செந்தில்பாலாஜி அவ்வளவு தான்... கரூருக்கும் கோவைக்கும் பொறுப்பு அமைச்சர்கள், மாவட்ட பொறுப்பாளர்களை போட வேண்டும்...’ என்று தன் ஆதரவாளர்களை உசுப்பேற்றிவிட்டு மீசைக்கார சீனியர் அமைச்சர் திமுக தலைமைக்கு நெருக்கடி கொடுத்தார் என்று கூறப்படுகிறது. 

ஆனால், செந்தில்பாலாஜியிடம் கேட்டபோது, கோவைக்கு வேண்டுமானால் நியமித்துக் கொள்ளுங்கள்... கரூருக்கு நான் வரும்வரை பொறுப்பு அமைச்சரோ, பொறுப்பு மாவட்டச் செயலாளரோ போட வேண்டும் என்று தலைமையிடம் ஸ்ட்ரிக்ட்டாக சொல்லிவிட்டாராம். கட்சியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, தலைமையும் அதற்கு ஓகெ சொல்லி கரூர் மீது கை வைக்கவில்லை. அதற்கான பரிசாக மக்களைவைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு வெற்றியை பரிசாக வழங்கினார் செந்தில்பாலாஜி என்று அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இந்த நிலையில், தற்போது சிறையில் இருந்து வெளியில் வந்துள்ள செந்தில்பாலாஜி திமுகவில் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை களையெடுப்புடன் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

குறிப்பாக தனக்கு எதிராக செயல்பட்ட எம்.எல்.ஏக்களை களையெடுக்க செந்தில்பாலாஜி திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே காளப்பநாயக்கன்பட்டி ஜோதிடரிடம் சென்ற எம்.எல்.ஏ ஒருவர், தன்னுடைய ஜாதகத்தோடு செந்தில்பாலாஜியின் ஜாதகத்தையும் காட்டி ‘இவருக்கு ஜாதகம் எப்படி இருக்கிறது?’ என்று கேட்டுள்ளாராம். இந்த விஷயம் சிறையில் இருந்த செந்தில்பாலாஜியின் காதிற்கு சென்றதும், அடுத்த நாளே கரூரில் தனக்கு எதிராக வேலைபார்க்கும் கட்சி நிர்வாகிகளின் செல்போன் கால் டீடெய்லஸ்களை எடுக்கச் சொல்லி உத்தரவிட்டார் என்று கரூர் திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த லிஸ்டில் இருப்பவர்களை அழைத்து யார் யாரை எப்படி டீல் செய்யவேண்டும் என்பதை செந்தில்பாலாஜி திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.  

பழைய பன்னீர்செல்வமாக திரும்பியுள்ள செந்தில்பாலாஜியின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கப்போகிறது? யார் யாரெல்லாம் காலியாக போகிறார்கள்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow