மதுரை மீனாட்சியை தரிசிக்கும் அமித்ஷா.. காரைக்குடியில் ரோடு ஷோ.. பல அடுக்கு பாதுகாப்பு

தமிழகம் வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை (ஏப்ரல் 5) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்வதோடு காரைக்குடியில் நடைபெறும் ரோடு ஷோவில் பங்கேற்கிறார்.

Apr 4, 2024 - 14:46
Apr 4, 2024 - 14:58
மதுரை மீனாட்சியை தரிசிக்கும் அமித்ஷா.. காரைக்குடியில் ரோடு ஷோ.. பல அடுக்கு பாதுகாப்பு

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமான நடைபெற உள்ளது. வாக்காளர்களை கவர புதுப்புது யுக்திகளை கையாண்டு வருகின்றனர் வேட்பாளர்கள்.அதேபோல் தேசிய கட்சிகளின் தலைவர்கள் தமிழகத்தில் வருகை தந்த வண்ணம் உள்ளனர். 

பிரதமர் நரேந்திர மோடி 6 முறை தமிழகத்திற்கு வந்து பாஜக மற்றும் கூட்டணி கட்சியினருக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் பாஜக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்றிரவு(ஏப்ரல்-04) 10 மணிக்கு மதுரை வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

நாளைய தினம்(ஏப்ரல்-5) வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்யப்போகிறார் அமித்ஷா. அதனை தொடர்ந்து சிவகங்கை, தென்காசியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அமித்ஷா பரப்புரை மேற்கொள்ள உள்ளார். அமித்ஷா வருகை காரணமாக மீனாட்சி அம்மன் கோயிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

மதுரையில் இருந்து சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செல்லும் அமித்ஷா, நாளை (ஏப்ரல் 5) பாஜக சார்பில் போட்டியிடும் தேவநாதன் யாதவ்க்கு ஆதரவாக நடைபெறும் ரோடு ஷோவில் அமைச்சர் அமித் ஷா பங்கேற்கிறார். இதற்காக ஹெலிகாப்டர் மூலம் அமைச்சர் அமித்ஷா காரைக்குடிக்கு வருகை தருகிறார். 

இதையொட்டி காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக சாலையில் உள்ள ஹெலிகாப்டர் தளம், மத்திய சிறப்பு பாதுகாப்பு படை மற்றும் சிறப்பு வெடிகுண்டு நிபுணர் குழுவினர் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் அங்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

ஹெலிபேட் தளத்தில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர். அழகப்பா பல்கலைகழகம், செக்காலை ரோடு முழுவதும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையை முன்னிட்டு உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வது,  வரும் வழித்தடம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து போலீஸ் அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். 

இந்தநிலையில் மத்திய , தமிழக காவல்துறை அதிகாரிகள் சார்பில் பெரியார் சிலை முதல் முதல் பீட் வரை ரோடு ஷோ ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. காரைக்குடியை தொடர்ந்து கன்னியாகுமரி, தென்காசியிலும் மத்திய அமைச்சர் அமித்ஷா பரப்புரை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow