பழனிவேல் தியாகராஜனுக்கு திடீர் ப்ரோமேஷன் : கனிமொழி தலைமையில் தேர்தல் தயாரிப்பு குழுவில் இடம்
கடந்த சில வருடங்களாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு, கனிமொழி தலைமையிலான தேர்தல் தயாரிப்பு குழுவில் இடம் அளித்து ப்ரோமேஷன் கொடுக்கப்பட்டுள்ளது. அதே போன்று காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசனுக்கு குழுவில் இடம் கொடுக்காமல் கல்தா கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதற்காக திமுக, அதிமுக உள்பட அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையையும் திமுக தலைவர் ஸ்டாலின் ஒருபுறம் தொடங்கியுள்ளார்.
மறுபுறம் சட்டமன்ற தேர்தல் வேட்பாளர் தேர்வு உள்பட பல்வேறு பணிகளிலும் திமுக தலைமை தயாராகி வருகிறது. இதன் தொடர்ச்சியாக 2026 சட்டமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு திமுக தலைமை அமைத்துள்ளது.
திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவில்,. டி.கே.எஸ்.இளங்கோவன், அமைச்சர்கள் கோவி செழியன், பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் குழுவில் உள்ளனர். டி.ஆர்.பி.ராஜா, எம்.எம்.அப்துல்லா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், எழிலன் ஆகியோரும் குழுவில் உள்ளனர். கார்த்திகேய சிவசேனாபதி, தமிழரசி ரவிக்குமார் ஆகியோரும் தேர்தல் உள்ளிட்ட 12 பேர் இடம் பெற்றுள்ளனர்.
பழனிவேல் தியாகராஜனுக்கு ப்ரோமேஷன்
நிதியமைச்சராக இருந்த பழனிவேல் தியாகராஜன் மீதான அதிருப்தி காரணமாக, அவர் ஐடி துறை அமைச்சராக மாற்றப்பட்டு, முக்கியத்துவம் குறைக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக கட்சி, ஆட்சி என இரண்டிலும் பழனிவேல் தியாகராஜன் முக்கியத்துவம் இல்லாமல் இருந்தார்.
இந்த நிலையில், தேர்தல் தயாரிப்பு குழுவில் பழனிவேல் தியாகராஜனுக்கு திமுக தலைமை இடம் கொடுத்து அவருக்கு மீண்டும் முக்கியத்துவம் கொடுத்துள்ளது திமுகவினர் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
எம்எல்ஏ எழிலரசன் கல்தா
2024 நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவில் காஞ்சிபுரம் தொகுதி எம்எல்ஏ எழிலரசன் இடம் பெற்றிருந்தார். 2026 சட்டமன்ற தேர்தல் அறிக்கை குழுவில் எம்எல்ஏ எழிலரசனுக்கு கல்தா கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மாணவரணி செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில், தேர்தல் அறிக்கை குழுவிலும் எழிலரசன் இடம் பெறவில்லை, 2026 சட்டமன்ற தேர்தலிலும் அவருக்கு மீண்டும் போட்டியிட திமுக தலைமை வாய்ப்பு அளிப்பதில் சந்தேகம் என அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
What's Your Reaction?

