அப்சரா ரெட்டி தொடர்ந்த அவதூறு வழக்கு-யூடியூபர் ரூ.50 லட்சம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவு

தவறான எண்ணங்களையும் வெறுப்புணர்வையும் பரப்ப சமூக ஊடகங்கள் பயன்படுத்தப்படுகிறது

Jan 13, 2024 - 13:27
அப்சரா ரெட்டி தொடர்ந்த அவதூறு வழக்கு-யூடியூபர் ரூ.50 லட்சம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவு

அதிமுக செய்தி தொடர்பாளர் அப்சரா ரெட்டி தொடர்ந்த அவதூறு வழக்கில், யூடியூபர் ஜோ மைக்கேல் பிரவீன் 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக செய்தி தொடர்பாளர் திருநங்கை அப்சரா ரெட்டி குறித்து ஜோ மைக்கேல் பிரவீன் என்பவர் யூடியூப் தளத்தில் தவறான தகவல்களை பதிவு செய்ததுடன் அவரது புகழுக்கும், கண்ணியத்திற்கும் இழுக்கு ஏற்படும்படி சமூக வலைதளங்களில் பதிவு செய்திருந்தார்.  

இதனை எதிர்த்து அப்சரா ரெட்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், ஜோ மைக்கேல் பிரவீன் பதிவு செய்ததாக கூறப்படும் 10க்கும் மேற்பட்ட வீடியோக்களை உடினடியாக நீக்க வேண்டும், அவரை சார்ந்தோர்கள் அவதூறான வீடியோ பதிவிட்டிருந்தால், அதையும் உடனடியாக நீக்க வேண்டும் என கூகுல் யூடியூப் நிறுவனத்துக்கு உத்தரவிட்டார். 

மேலும், தனிமனித தாக்குதலில் ஈடுபட்ட யூடியூபர் நடவடிக்கைகளை கண்டித்ததுடன் அப்சரா ரெட்டிக்கு 50 லட்சம் ரூபாய் மான நஷ்டஈடாக வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.சமூகத்தில் திருநங்கைகள் சமுதாயத்தினர் எதிர்கொள்ளும் சிரமங்கள் மற்றும் கஷ்டங்களைக் குறிப்பிட்ட நீதிபதி, சமூக வலைதளங்களில் பதிவிடும் கருத்துக்கள் அவர்களின் உணர்வுகளை பாதிக்காத வகையிலும் கண்ணியமாக இருக்கும் வகையிலும் வழிநடத்த கூகுள் மற்றும் யூடியூப் நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார். 

இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த அப்சரா ரெட்டி, இதுபோன்ற வெறுப்பு பிரச்சாரம் மற்றும் தவறான பதிவுகள் குறித்து தான் எப்போதும் மௌனமாக இருப்பதாகவும், உரிய நீதி வேண்டி நீதிமன்றங்களை நாடி சரியான தீர்வு பெற்றிருப்பதாகவும் தெரிவித்தார். தவறான எண்ணங்களையும் வெறுப்புணர்வையும் பரப்ப சமூக ஊடகங்கள் பயன்படுத்தப்படுவதாக குற்றம் சாட்டிய அவர், இதுபோன்ற செயல்கள் மனிதாபிமானமற்றது என்றும் சாடினார். 

மேலும், தான் இத்தோடு நிறுத்தப்போவதில்லை என்றும், சமூகத்தில் ஒதுக்கப்பட்ட மக்களை இழிவுபடுத்த முயற்சிக்கும் எவரும் பெரும் விலை கொடுக்க நேரிடும் என்றும், அப்படி இன்னலுக்குள்ளாகும் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு என்றுமே துணை நிற்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow