ஆரஞ்சு அலர்ட் கொடுத்த வானிலை மையம்.. 26 மாவட்ட கலெக்டர்களுக்கு பறந்த அவரச கடிதம்..
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வரும் 19ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஆணையர் அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
தமிழ்நாட்டில் கோடை வெயிலின் உச்சமான அக்னி நட்சத்திரம் வாட்டி வதைத்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக காலை வேளைகளில் வெயில் சுட்டெரித்தும், பிற்பகலில் மழை பெய்தும் வருகிறது.
இதற்கிடையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கை கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (15.05.2024) தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தேனி, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், நீலகிரி, திருப்பூர் மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று (மே 15) மூன்று மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. 11 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது. தேனி விருதுநகர் தென்காசி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. 18 ஆம் தேதி 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.
தென்காசி தூத்துக்குடி திருநெல்வேலி கன்னியாகுமரி மாவட்டங்களில் வரும் 18ஆம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. 19 ஆம் தேதி 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. வரும் 19ஆம் தேதி நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
தமிழ்நாட்டில் கோடை மழை குறைவாக பெய்துள்ளது. மார்ச் முதல் தற்போது வரை தமிழகத்தில் இயல்பைவிட கோடை கால பருவமழை 44% குறைவாக பெய்துள்ளது. சென்னையில் 99% குறைவாக பெய்துள்ளதாகவும் வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் கனமழை எச்சரிக்கையை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை உத்தரவிட்டுள்ளது.
தென்காசி, தேனி, நீலகிரி, கோவை, விருதுநகர் உள்ளிட்ட 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஆணையர் அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் வரும் 19 ஆம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும். எனவே கனமழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகத்தின் அனைத்து துறைகளும் முழுவீச்சில் தயாராக இருக்க வேண்டும். நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின்படி கனமழையை எதிர்கொள்ள ஆயத்தமாக இருக்க வேண்டும். கனமழையின்போது எதிர்பாராத நிகழ்வு ஏற்பட்டால் ஆட்சியர்கள் உடனே பேரிடர் மேலாண்மை துறைக்கு தகவல் தர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?