பெளலர்களை கதறவிட்ட அதிரடி மன்னன்... கிரிக்கெட்டில் இருந்து 'புஷ்பா' நாயகன் டேவிட் வார்னர் ஓய்வு!

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி 'சூப்பர் ஹிட்' வெற்றி பெற்ற 'புஷ்பா' படத்துக்கு படக்குழுவினரை விட அதிகம் விளம்பரப்படுத்தியவர் வார்னர் என்றே சொல்லலாம். 'புஷ்பா' படம் மூலம் அல்லு அர்ஜுனின் தீவிர ரசிகராக மாறிய வார்னர், 'புஷ்பா' படத்தில் அல்லு அர்ஜுன் செய்யும் மேனரிஸங்களை இந்திய மைதானங்களில் அப்படியே செய்து காண்பித்து ரசிகர்களை குஷிப்படுத்தினார்.

Jun 25, 2024 - 18:46
பெளலர்களை கதறவிட்ட அதிரடி மன்னன்... கிரிக்கெட்டில் இருந்து 'புஷ்பா' நாயகன் டேவிட் வார்னர் ஓய்வு!
டேவிட் வார்னர்

சிட்னி: ஆஸ்திரேலிய அதிரடி வீரர் டேவிட் வார்னர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

2023ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணி, தற்போது நடந்து வரும் டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. 'சூப்பர் 8' சுற்றில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அதிர்ச்சி தோல்வி அடைந்த ஆஸ்திரேலியா, இந்தியாவுக்கு எதிராகவும் படுதோல்வி அடைந்து தொடரில் இருந்து தூக்கி எறியப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா முன்னணி வீரர்கள் ஒருங்கிணைந்து விளையாடததே தோல்விக்கு காரணமாகும். குறிப்பாக அதிரடி வீரர் டேவிட் வார்னர் ஆப்கானிஸ்தான், இந்தியாவுக்கு எதிராக கடுமையாக சொதப்பினார். இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக டேவிட் வார்னர் அறிவித்துள்ளார்.

உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா மோசமாக செய்யப்பட்டுள்ள நிலையில், வார்னர் இந்த முடிவை எடுத்துள்ளார்.  கடந்த ஆண்டு ஓடிஐ போட்டிகளில் இருந்தும், இந்த ஆண்டு தொடக்கத்தில் டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெற்ற வார்னர், இப்போது அனைத்து சர்வதேச போட்டிகளுக்கும் விடை கொடுத்துள்ளார்.

37 வயதான டேவிட் வார்னர் முதன் முதலில் 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியின் மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு அறிமுகமானார். பின்பு 2009ம் ஆண்டு அதே மாதம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கினார்.

2011ம் ஆண்டு டிசம்பர் மாதம் நியூசிலாந்துக்கு எதிராக டெஸ்ட் வீரராக களம் கண்டார். உலகின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவரான வார்னர், 110 டி20 போட்டிகளில் விளையாடி 28 அரைசதம் மற்றும் 1 சதத்துடன் 3,277 ரன்கள் அடித்துள்ளார். 112 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3 இரட்டை சதம், 26 சதங்களுடன் 8,786 ரன்கள் குவித்துள்ளார்.

இதேபோல் 161 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 22 சதங்கள், 33 அரைசதங்களுடன் 6,932 ரன்கள் அடித்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்காக பல போட்டிகளில் கேப்டனாக இருந்த வார்னர், அணிக்கு பலமுறை வெற்றியை தேடி கொடுத்துள்ளார். 

இதேபோல் 184 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 4 சதம், 62 அரைசதங்களுடன் 6,565 ரன்கள் குவித்துள்ளார். இவரது தலைமையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது. டேவிட் வார்னரின் அதிரடி ஆட்டத்துக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். இந்தியாவில் வார்னரின் பெயர் தெரியாத கிரிக்கெட் ரசிகர்கள், ஏன் வார்னரின் பெயர் தெரியாத சினிமா ரசிகர்களே இல்லை எனலாம். 

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி 'சூப்பர் ஹிட்' வெற்றி பெற்ற 'புஷ்பா' படத்துக்கு படக்குழுவினரை விட அதிகம் விளம்பரப்படுத்தியவர் வார்னர் என்றே சொல்லலாம். 'புஷ்பா' படம் மூலம் அல்லு அர்ஜுனின் தீவிர ரசிகராக மாறிய வார்னர், 'புஷ்பா' படத்தில் அல்லு அர்ஜுன் செய்யும் மேனரிஸங்களை இந்திய மைதானங்களில் அப்படியே செய்து காண்பித்து ரசிகர்களை குஷிப்படுத்தினார்.

இந்தியா மீதும் இந்தியர்கள் மீதும் எப்போதும் மிகுந்த அன்பு வைத்திருக்கும் வார்னர், இந்தியாவில் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதேபோல் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் வார்னர் மீது அளவுக்கடந்த அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இப்படி நல்ல பெயர் எடுத்த வார்னர் சர்ச்சைகளிலும் சிக்காமல் இல்லை. களத்தில் ஆக்ரோஷமாக செயல்படும் வார்னர், எதிரணி வீரர்களிடம் வம்பிலுப்பதிலும் வல்லவர். கடந்த 2018ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்தியதால் வார்னர் 1 ஆண்டு காலம் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow