சென்னையில் கடைசி போட்டி... கேப்டனின் பொறுப்பான ஆட்டத்தால் வெற்றி..! ரசிகர்களுக்கு CSK கொடுத்த சர்ப்ரைஸ்...

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான 61 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி ஹோம் கிரவுண்ட் போட்டி என்பதால் மைதானம் ரசிகர்களின் ஆரவாரத்தால் களைகட்டியது. 

May 12, 2024 - 21:23
May 12, 2024 - 21:42
சென்னையில் கடைசி போட்டி... கேப்டனின் பொறுப்பான ஆட்டத்தால் வெற்றி..!  ரசிகர்களுக்கு CSK கொடுத்த சர்ப்ரைஸ்...

2024 ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அந்த வகையில் சென்னை அணி தனது கடைசி ஹோம் கிரவுண்ட் ஆட்டத்தில் ராஜஸ்தானை எதிர்கொண்டது. இந்த போட்டி துவங்குவதற்கு முன்பே ரசிகர்கள் போட்டி முடிந்தும் மைதானத்தில் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. 

இந்நிலையில்,  டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய அணியின் ஓபனர்கள் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். எனினும் சிமர்ஜீத் சிங்கின் அபாரமான பந்துவீச்சால் அடுத்தடுத்து ஜெய்ஸ்வாலும், பட்லரும் விக்கெட்டை இழந்தனர். 

தொடர்ந்து சிஎஸ்கே அணியின் சிறப்பான பந்துவீச்சால் ராஸ்தான் அணி தடுமாறியது . ரியான் பராக்கின் பொறுப்பான ஆட்டம் ஓரளவு கை கொடுத்த காரணத்தால் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 141 ரன்களை குவித்தது. 

தொடர்ந்து களமிறங்கிய சிஎஸ்கே அணியின் ஓபனர்கள் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தாலும், அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். எனினும் ஒரு முனையில் பொறுப்புடன் ஆடிய கேப்டன் ருதுராஜ் அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச்சென்றார். 

இதனிடையே போட்டியின் 16 வது ஓவரில், ஆவேஸ் கான் வீசிய பந்தை அடித்துவிட்டு ஜடேஜா ஓடியபோது ஸ்டம்பை நோக்கி பீல்டரால் பந்து எறியப்பட்டது. அப்போது, ஜடேஜா குறுக்கே சென்று ஓடியதால், அது விதிமீறலாக கருதப்பட்டு அவருக்கு அவுட் கொடுக்கப்பட்டது. 

இறுதியாக 18.2 ஓவரில் இலக்கை 5 விக்கெட் வித்தியாத்தில் எட்டிய சென்னை அணி வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 3 வது இடத்தை பிடித்தது. இது ஹோம்கிரவுண்டில் சென்னை அணி பதிவு செய்யும் 50வது போட்டி என்பது குறிப்பிடதக்கது. கடைசி போட்டியில் சென்னை அணி RCB-ஐ எதிர்கொள்கிறது. அப்போட்டி பெங்களுரூ சின்னசாமி மைதானத்தில் மே 18 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதனிடையே அணி நிர்வாகம் கேட்டுக்கொண்டதன்படி, போட்டி முடிந்தும் ரசிகர்கள் காத்திருந்தனர். பெரும்பாலான ரசிகர்களின் எண்ணம் தோனியின் ரிடைர்மென்ட் அறிவிப்பாகதான் இருக்கும் என நினைத்துக்கொண்டிருந்தனர். 

அப்போது மைதானத்தில் கூடிய அணி வீரர்கள் என்றென்றும் yellove என்ற வாசகத்தை கொண்ட டீசர்ட்டை அணிந்துகொண்டனர். ஆனால் தோனி மட்டும் அதை அணியவில்லை அப்போதே பாதி ரசிகர்களின் முகம் வாடிவிட்டது. அணி வீரர்களுக்கு நிர்வாகத்தின் சார்பாக பதக்கங்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து கடைசி ஹோம் கிரவுண்ட் போட்டி என்பதால் தோனி அணியினருடன் மைதானத்தை வலம் வந்து, பந்துக்களை ரசிகர்களை நோக்கி வீசினார். பந்தை போட்டி போட்டு ரசிகர்கள் கேட்ச் பிடித்தனர்.

எனினும் ரசிகர்கள் எதிர்பார்த்தை போல ஓய்வு அறிவிப்பை தோனி அறிவிக்கவில்லை.. ஆனால், தோனி ஏன் என்றென்றும் yellove டீ-சர்ட்டை அணியவில்லை என்ற கேள்வி ஒருபக்கம் ரசிகர்கள் மனதில் இருக்கும் நிலையில்,  மறுபக்கம் தோனி தொடர்ந்து விளையாடுவோரா என்ற நப்பாசையுடன் ரசிகர்கள் மைதானத்தை விட்டு வெளியேறினர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow