காவிரி விவகாரத்தில் பாஜக - காங்கிரஸ் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது... எடப்பாடி குற்றச்சாட்டு
மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டினால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை ஆணையம் தனது வரையறுக்கப்பட்ட பணி வரம்புக்கு அப்பாற்பட்டு 28-வது காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவது குறித்து விவாதித்து மேல் நடவடிக்கைக்காக மத்திய நீர்வள ஆணையத்துக்கு அனுப்பியதை கண்டித்தும், காவிரி நீர் விவகாரத்தில் துரோகம் இழைத்து வரும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், தொடர்ந்து விவசாயிகளுக்கு துரோகம் இழைத்து வரும் தி.மு.க. அரசை கண்டித்து தஞ்சை திலகர் திடலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பொதுக் கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, மத்தியில் திமுக கூட்டணி ஆட்சியின் போதுதான் தஞ்சையில் மீத்தேன், ஈத்தேன் எடுப்பதற்கும், புதுக்கோட்டையில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டதாக குற்றஞ்சாட்டினார். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தனது தலைமையிலான ஆட்சியில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டதை அவர் குறிப்பிட்டார்.
அதிமுக அரசு சட்டப்போராட்டம் நடத்தியதன் விளைவாக, ஆண்டுக்கு குறிப்பிட்ட அளவு டிஎம்சி தண்ணீர் திறந்து விடவேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பளித்ததாக பழனிசாமி தெரிவித்தார். அதிமுக ஆட்சியின் போதுதான் நாடாளுமன்றத்தில் 39 அதிமுக எம்பிக்கள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைத்தது.இது ஒட்டுமொத்த விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி என்று குறிப்பிட்டார்.
அதிமுக ஆட்சியின் மூலம் பெறப்பட்ட உத்தரவின் பேரில் கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீரை பெற்றுதர திராணியில்லா அரசாங்கமாக திமுக அரசு உள்ளதாக குறிப்பிட்டார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி செய்தாலும்,பாஜக ஆட்சி செய்தாலும் தமிழகத்தை வஞ்சிப்பதாக தெரிவித்தார். மேகதாதுவில் அணை கட்டினால் டெல்டா பாலைவனமாகும்...
விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு தங்களது ஆட்சி காலத்தில் கோதாவரி - காவிரி இணைப்பு திட்டத்திற்கு முன்முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதுதொடர்பாக தெலங்கானா, ஆந்திரா முதலமைச்சர்களிடம் பேசிய சம்மதம் பெற்றதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். ஆனால் இந்த திட்டத்தை திமுக அரசு கிடப்பில் போட்டதாக குற்றஞ்சாட்டிய அவர், மீண்டும் அதிமுக ஆட்சி அமைத்து இந்த திட்டத்தை கொண்டு வருவோம் என்று கூறினார்.
விவசாயிகளின் ரத்தத்தை அட்டை போல் இந்த அரசு உறிஞ்சுவதாகவும், மீண்டும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் ஆண்டவனால் கூட தமிழகத்தை காப்பாற்ற முடியாது என்றும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார். விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற வேண்டுமானால், வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஆர். காமராஜ், ஓ.எஸ். மணியன், சி.விஜயபாஸ்கர், என்.ஆர்.சிவபதி, மு.பரஞ்சோதி, எஸ்.வளர்மதி, பி.பெஞ்சமின், பி.வி.ரமணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?