ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்... பாஜக பிரமுகருக்கு காவல்துறை சம்மன்...
சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4 கோடி ரூபாய் தொடர்பாக பாஜக பிரமுகருக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழ்நாட்டில் வரும் 19ஆம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவது உள்ளிட்ட தேர்தல் நடத்தை விதிமீறல்களை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர், தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி இரவு ரயிலில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட 4 கோடி ரூபாய் பணத்தை தாம்பரம் ரயில் நிலையத்தில் போலீசார் பறிமுதல் செய்தனர். இதனை எடுத்துச் சென்ற ஹோட்டல் மேலாளர் சதீஷ், நவீன் மற்றும் பெருமாள் ஆகியோரையும் கைது செய்திருந்தனர்.
அந்த ஹோட்டல் நெல்லை தொகுதி பாஜக வேட்பாளரான நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என்பதால், பிடிபட்ட 4 கோடி ரூபாய் அவருக்கு சொந்தமானது தான் என்றும் தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து, அவருக்கு சொந்தமான ஹோட்டல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
பணம் கடத்தல் தொடர்பாக தாம்பரம் போலீசார் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், பாஜக தொழில் துறை மாநில துணைத்தலைவர் கோவர்த்தனனுக்கு சொந்தமான சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் செயல்பட்டு வரும் உணவகத்தில் ஒரு கோடி ரூபாய் கைமாறியதாக போலீசாருக்கு தெரியவந்திருக்கிறது. தொடர்ந்து அங்கு நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், கணக்கில் வராத 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணத்தை போலீசார் கைப்பற்றினர்.
இந்நிலையில், பாஜக தொழில்துறை மாநில துணைத்தலைவர் கோவர்தனன் இன்று நேரில் விசாரணைக்கு ஆஜராக தாம்பரம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். மேலும், நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன் மற்றும் அவரது நண்பர்கள் ஜெய்சங்கர், ஆசைத்தம்பி ஆகியோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
What's Your Reaction?