வாக்கு எண்ணிக்கை மையங்களில் பழுதில்லாமல் சிசிடிவி இயங்க வேண்டும்.. சத்ய பிரதா சாகுவிடம் திமுக மனு..

வாக்கு எண்ணிக்கை மையங்களில் சிசிடிவி கேமராக்கள் பழுது இல்லாமல் இயங்க வேண்டும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவிடம் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

Apr 29, 2024 - 18:44
வாக்கு எண்ணிக்கை மையங்களில் பழுதில்லாமல் சிசிடிவி இயங்க வேண்டும்.. சத்ய பிரதா சாகுவிடம் திமுக மனு..

இது தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்பி என்.ஆர்.இளங்கோ, நீலகிரி தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் சிசிடிவி கேமராக்கள் 20 நிமிடங்கள் செயல்படவில்லை என்று குற்றஞ்சாட்டினார். 

மின் இணைப்பில் பழுது ஏற்பட்ட காரணத்தால் சிசிடிவி கேமராக்கள் இயங்கவில்லை என்று நீலகிரி நாடாளுமன்ற தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்துள்ளதாக விளக்கம் அளித்தார். இதையடுத்து அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் எந்தவித பழுதும் இன்றி இயங்க வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரியிடம்  கோரிக்கை மனு அளித்துள்ளதாக என்.ஆர். இளங்கோ குறிப்பிட்டார். 

இதேபோன்று வாக்குப்பதிவு  இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தின் இருந்து குறைந்த பட்சம் 500 மீட்டர் சுற்றளவில் ட்ரோன் பறக்க தடை விதிக்க வேண்டும் என்று  கோரிக்கை வைத்துள்ளோம். இது குறித்து பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் No drone fly zone  தொடர்பாக உரிய அறிக்கை  காவல்துறைக்கு அனுப்புவதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். 

சிசிடிவி கேமராக்கள் நிச்சயம் பழுதடையாமல் பார்த்துக் கொள்வோம் என்ற உறுதியை தலைமை தேர்தல் அதிகாரி அளித்துள்ளார் என்றும் என்.ஆர்.இளங்கோ தெரிவித்தார்.

கோவை மக்களவைத் தொகுதியில் ஒரு லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளார்கள் என்ற அண்ணாமலையின் குற்றச்சாட்டு தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இந்த பட்டியலை தயாரிப்பது தேர்தல் ஆணையத்தின் பணி. இதில் யாரும் தலையிட முடியாது. மக்களோடு பணியாற்ற கூடிய அனைத்து அரசியல் கட்சியினருக்கும் இது தெரியும். வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக்கில் கட்சி நடத்துபவர்களுக்கு இது தெரியாது. இவர்கள் சட்டத்தை  படித்து அதை தெரிந்து கொள்ள வேண்டும் என்று என்.ஆர்.இளங்கோ விமர்சித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow