’’மத்தியில் பாஜக ,தமிழகத்தில் அதிமுக ஆட்சி…’’- எடப்பாடி , பியூஷ் கோயல் கூட்டாக அறிவிப்பு

மத்தியில் பாஜகவும், தமிழகத்தில் அதிமுக ஆட்சி என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிவித்து உள்ளனர்.

’’மத்தியில் பாஜக ,தமிழகத்தில் அதிமுக ஆட்சி…’’- எடப்பாடி , பியூஷ் கோயல் கூட்டாக அறிவிப்பு
''BJP in the center, AIADMK rule in Tamil Nadu...''

பசுமைவழிச்சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு இன்று காலை தமிழக பாஜக மேலிடத் தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் வருகை தந்தனர். அனைவருக்கும் எடப்பாடி பழனிசாமி காலை விருந்தளித்து சிறப்பித்தார்.

தேர்தல் ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. முதலில் பேசிய பியூஷ் கோயல், எடப்பாடி பழனிசாமி எனது பழைய நண்பர். அவர் மீது நான் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் தலைமை மற்றும் வழிகாட்டுதலின்கீழ் தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஊழல் மிகுந்த, முன்னேற்றத்துக்கு தடையான செயலற்ற  திமுக அரசை முற்றிலுமாக தூக்கி எறியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. 

திமுக இந்த தேர்தலில் தோல்வியடைய போகிறது. பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு தமிழக மக்களும் குடும்ப ஆட்சியையும், ஊழலையும் தவிர மக்களின் நன்மைக்காக திமுக எதையும் செய்யவில்லை என்பதை உணர்ந்திருக்கிறார்கள். ஊழலும், வளர்ச்சிக்குத் தடையான செயல்பாடுகளும்தான் இந்த ஆட்சியின் அடையாளமாக இருக்கிறது.

தேசவிரோத கருத்துகளை தெரிவிக்கும் உதயநிதி ஸ்டாலினை நாங்கள் முழுவதுமாக எதிர்க்கிறோம். உதயநிதியின் வெறுப்பு பேச்சு குறித்து உயர் நீதிமன்றம் நேற்று அதிருப்தி தெரிவித்துள்ளது. உதயநிதி ஸ்டாலின் உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும். சமூக நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் அவர் வெறுப்புகளை தூண்டும் பேச்சுக்காக வும், தமிழக மக்களை பிரிக்கும் வகையில் பேசியதற்காகவும், மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நாளை பிரதமர் தமிழகம் வருவதை நாங்கள் ஆவலுடன் எதிர்நோக்கி கத்திருக்கிறோம்…’’ என்றார்.

இதையடுத்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘’இன்றைய தினம் பியூஷ் கோயல் வருகை மகிழ்ச்சி தருகிறது. அவரோடு பாஜக பொறுப்பாளர்கள், அதிமுக நிர்வாகிகள் வந்திருந்தனர். இல்லத்தில் நாளை நடைபெறும் பிரதமர் பொதுக்கூட்ட ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. நாளை நடக்கும் கூட்டம் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். சுமார் 5 லட்சம் பேர் கலந்துகொள்வார்கள். இந்த தொடக்கம் கூட்டணி வெற்றிக்கு அச்சாணியாக அமையும். 

இன்று தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது, சிறுமிகளுக்கும் பொதுமக்களுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பில்லாத சூழ்நிலை நிலவுகிறது. எல்லா துறையிலும் தோல்வி அடைந்துவிட்டது திமுக அரசு. எல்லா துறைகளிலும் ஊழல். 4 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளது குறித்து ஆளுநரிடம் புகார் மனு அளித்திருக்கிறோம். 

எங்கள் கூட்டணி வலிமையானது. பாரதப்பிரதமர் இந்திய நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவது மட்டுமல்ல, மேட் இன் இந்தியாவை நடைமுறைப்படுத்தி, இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றவும் நடவடிக்கை எடுத்துவருகிறார். மத்தியில் தே.ஜ.கூட்டணி சார்பில் பாஜக ஆட்சியும், தமிழகத்தில் அதிமுக ஆட்சியும் அமையும். இதனால் இதுவரை இல்லாத அளவில் வளர்ச்சியை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதன் மூலம் வழங்குவோம்”என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow