இதுதான் திராவிட மாடலா? - I.N.D.I.A கூட்டணி ஊழல் கூட்டணியாக உள்ளது...சுதாகர் ரெட்டி சாடல்

இதுதான் திராவிட மாடலா? - I.N.D.I.A கூட்டணி ஊழல் கூட்டணியாக உள்ளது...சுதாகர் ரெட்டி சாடல்

இந்தியா கூட்டணி ஊழல் கூட்டணியாக உள்ளது என பாஜக மேலிட தேர்தல் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி விமர்சனம் செய்துள்ளார். 

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு பாஜக தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வரும் நிலையில், அக்கட்சியின் மேலிட தலைவர்கள் தமிழ்நாட்டிற்கு வருகை தந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பாஜக மேலிட தேர்தல் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தஞ்சாவூருக்கு வருகை தந்து பாஜக வேட்பாளர் முருகானந்தத்தை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். 

இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுதாகர் ரெட்டி, தேசிய ஜனநாயக கூட்டணி ஊழலற்ற கூட்டணியாக உள்ளது. காங்கிரஸ் மற்றும் திமுக குடும்ப கட்சியாகவும் I.N.D.I.A கூட்டணி ஊழல் கூட்டணியாக உள்ளது எனவும் கூறினார். குடும்ப உறுப்பினர்களின் வளர்ச்சிக்காகவும், ஊழல் செய்வதற்காகவும் திமுகவும் காங்கிரசும் உள்ளன.  ஆனால், பாஜகவிற்கு நாட்டின் சேவையே லட்சியமாக இருக்கிறது" எனத் தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், "கச்சத்தீவு விவகாரத்தில் I.N.D.I.A கூட்டணியில் உள்ள வைகோ காங்கிரஸ் கட்சியை பலமுறை குற்றம் சாட்டியுள்ளார், ஆனால், முதலமைச்சர் ஸ்டாலின் இதுவரை வாய் திறக்கவில்லை. சனாதன தர்மத்தை பற்றி ஸ்டாலினும், உதயநிதியும் பேசுகின்றனர். ஆனால் அவரது குடும்ப உறுப்பினர்கள் கோயிலுக்கு செல்கின்றனர். ஹோமம் செய்கின்றனர். மணல் திருட்டு, நிலத் திருட்டு, கட்டப்பஞ்சாயத்து, போதைப் பொருள் குற்றம் உள்ளிட்டவற்றை திமுக அரசு கட்டுப்படுத்தவில்லை. இதுதான் திராவிட மாடலா?" என்று கேள்வி எழுப்பினார். 

மேலும், அண்ணாமலையின் என் மண், என் மக்கள் யாத்திரை பாஜகவிற்கு புத்துணர்ச்சியாக உள்ளது. மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர்கள் பெரும்பான்மையான வாக்குகள் பெற்று வெற்றி பெறுவார்கள் எனவும் சுதாகர் ரெட்டி நம்பிக்கை தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow