சென்னையில் கடைசி நேரத்தில் பக் பக்.. வேட்புமனுக்கள் ஏற்பு.. வேட்பாளர்கள் ரிலாக்ஸ்

வேட்புமனுக்கள் பரிசீலனைக்குப்பிறகு சென்னையில் வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை தொகுதிகளில் போட்டியிடும் திமுக,பாஜக,தேமுதிக,நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பிரதான கட்சி வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

Mar 28, 2024 - 14:25
சென்னையில் கடைசி நேரத்தில் பக் பக்.. வேட்புமனுக்கள் ஏற்பு..  வேட்பாளர்கள் ரிலாக்ஸ்

லோக்சபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான வேட்புமனு தாக்கல்  கடந்த 20ஆம் தேதி தொடங்கியது என்றாலும் 25ஆம் தேதி பங்குனி உத்திரம் நாளில்தான் வேட்புமனுக்களை பெரும்பாலோனோர் தாக்கல் செய்தனர். நேற்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. இன்றைய தினம் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. 

தென் சென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தமிழச்சி தங்கபாண்டியன் வேட்பு மனு ஏற்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார்.  அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன், தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. வடசென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் கலாநிதி வீராசாமி, அ.தி.மு.க வேட்பாளர் ராயபுரம் மனோ ஆகியோரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.

மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக தயாநிதிமாறன்,பாஜக வேட்பாளராக வினோஜ் பி செல்வம் அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பாக பார்த்தசாரதி நாம் தமிழர் கட்சி சார்பில் கார்த்திகேயன் உள்ளிட்ட பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 58 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் வேட்பாளர்களின் வேட்புமனு மீதான பரிசீலனை இன்று ஷெனாய் நகர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. 

வேட்புமனு மீதான பரிசீலனையின் போது திமுக வேட்பாளர் தயாநிதி மாறன்,தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதி மற்றும் அந்தந்த வேட்பாளர்களின் பொறுப்பாளர்கள் நேரில் பங்கேற்றனர். வேட்புமனு மீதான பரிசீலனையின் போது பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவீன் குமார் அறிவித்தார். அப்போது திமுக தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வத்தின் பிரமாண பத்திரம் தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படவில்லை எனவே வினோஜ் பி  செல்வம் வேட்புமனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.

இதற்கு தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவீன் குமார் வேட்புமனு பரிசீலனைக்கு முன்பு விவரங்களை கொடுத்து விட்டதாகவும் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும் எனவும் தேர்தல் நடத்தும் அலுவலரின் விளக்கம் கொடுத்த நிலையில் இந்த விளக்கத்தை திமுக ஏற்றுக் கொண்டதை அடுத்து வினோஜ் பி செல்வம் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்தார்.

தொடர்ந்து திமுக வேட்பாளர் தயாநிதிமாறன்,தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதி,நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோரியின் வேட்புமனுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்தார். மேலும் இன்று மாலை ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுவின் முழு விவரங்களை தேர்தல் நடத்தும் அலுவலர் வெளியிடுவார். 

வேட்பு மனுவை திரும்ப பெறுவதற்கான கால அவகாசம் 30 ஆம் தேதி வரை கொடுக்கப்பட்டுள்ளது.30ஆம் தேதி அன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow