நள்ளிரவில் நடமாடும் கரடி, கருஞ்சிறுத்தை.. சிசிடிவி காட்சியால் அச்சத்தில் உறைந்த கோத்தகிரி மக்கள்

Apr 18, 2024 - 16:13
நள்ளிரவில் நடமாடும் கரடி, கருஞ்சிறுத்தை.. சிசிடிவி காட்சியால் அச்சத்தில் உறைந்த கோத்தகிரி மக்கள்

கோத்தகிரி அருகே கரடியும், கருஞ்சிறுத்தையும் நள்ளிரவு நேரத்தில் வீதிகளில் நடமாடும் சிசிடிவி காட்சியால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

காடுகளும், மலைகளும் சூழ்ந்த நீலகிரி மாவட்டத்தில் வனப்பகுதியில் ஏராளமான விலங்குகள் உள்ளன. இந்த விலங்குகள் காட்டைவிட்டு வெளியே வந்து மனிதர்களை தாக்குவதும், பயிர்களை சேதப்படுத்தும் சம்பவங்களும் அவ்வப்போது அரங்கேறும். காட்டு யானைகள் மற்றும் மாடுகள் தாக்கி சிலர் உயிரிழந்த நிகழ்வுகளும் நடந்துள்ளன.

கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகள் பெரும்பாலும் வனப்பகுதிகள், தேயிலை தோட்டங்கள் நிறைந்ததாக காணப்படுகிறது. இங்கு சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் சர்வசாதாரணமாக உலா வருகின்றன. இரவு நேரங்களில் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளை வேட்டையாட காட்டு விலங்குகள் வீதியில் நடமாடுவது அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் கோத்தகிரி அருகே உள்ள பெரியார் நகர் பகுதியில் இரவு நேரத்தில் கரடியும், கருஞ்சிறுத்தையும் அடுத்தடுத்து உலா வரும் காட்சிகள் அப்பகுதியில் உள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளன. இதனால் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வருவதற்கு கூட அச்சமடைந்து முடங்கியுள்ளனர். மேலும் வனவிலங்குகளை அடர்ந்த காட்டுக்குள் விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow