கடலூர் மாநகராட்சி மேயர் வீட்டில் ரெய்டு.. பணப்பட்டுவாடா புகாரில் ஐ.டி அதிகாரிகள் சோதனை !

காழ்ப்புணர்ச்சி காரணமாகவே வருமானவரித்துறையினரின் சோதனை நடைபெறுவதாக மேயரின் கணவர் குற்றச்சாட்டு

Apr 18, 2024 - 15:52
கடலூர் மாநகராட்சி மேயர் வீட்டில் ரெய்டு.. பணப்பட்டுவாடா புகாரில் ஐ.டி அதிகாரிகள் சோதனை  !

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில் பணப்பட்டுவாடா புகாரை தொடர்ந்து, கடலூர் மாநகராட்சி மேயர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நாளை நடைபெறுகிறது. இதையடுத்து, வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க தமிழ்நாடு முழுவதும் உள்ள தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாக கண்காணித்து சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் பல இடங்களில் நடந்த அதிரடி சோதனையில் பணப்பட்டுவாடா செய்த அரசியல் பிரமுகர்கள் கையும் களவுமாக பிடிபட்டனர். உரிய ஆவணங்கள் இன்றி எடுத்தச்செல்லப்பட்ட பணம் மற்றும் பொருட்கள் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டன.  

இதில், குறிப்பாக நெல்லைக்கு எடுத்துச்செல்லப்படவிருந்த ரூ.4 கோடி பணம் ரயிலில் சிக்கியது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடதக்கது. 

இந்நிலையில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் உள்ள மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜாவின் வீட்டில் வைத்து பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இந்த நிலையில், அவரது வீட்டிற்கு விரைந்து சென்ற வருமானவரித்துறை அதிகாரிகள் 6க்கும் மேற்பட்டோர் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

இது குறித்து பேசிய சுந்தரியின் கணவரும் திமுக நகர செயலாளருமான ராஜா, காழ்ப்புணர்ச்சி காரணமாகவே வருமானவரித்துறையினரின் சோதனை நடைபெறுவதாக குற்றம் சாட்டினார். எனினும் இந்த சோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow