பணப்பட்டுவாடா புகார்... கட்டுக்கட்டாக சிக்கியப் பணம்... ரூ.4 கோடி எப்படி வந்தது..?
புதுச்சேரியில் ரூ.4.9 கோடி பறிமுதல்
புதுச்சேரியில் பைனான்சியர் ஒருவரின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான நெல்லித்தோப்பு அலுவலகத்தில் இருந்து, 4 கோடியே 9 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயை வருமானவரித் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்க, புதுச்சேரியில் 72 பறக்கும் படை குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், 100 அடி ரோடு ஜான்சி நகரில், முருகேசன் பெரியபாளையத்தம்மன் என்ற பைன்னான்ஸ் நிறுவனம் நடத்தி வரும் பைனான்சியர் முருகேசன் என்பவரது வீட்டில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து அங்கு சென்று தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், வீட்டை அலசி ஆராய்ந்தனர். அப்போது, சாக்கு மூட்டையில் 1 கோடி ரூபாய் மதிப்பிலான செல்லாத 2,000 ரூபாய் நோட்டுகளும், 2 கோடியே 60 லட்சம் மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகளும் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதனிடையே, பைனான்சியர் முருகேசனின் நெல்லித்தோப்பு அலுவலகத்தில் இருந்தும் கட்டுக் கட்டாக பணம் சிக்கியுள்ளது. இவ்வாறு இரு இடங்களில் இருந்தும், 4 கோடியே 9 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயை அதிகாரிகள் கைப்பற்றினர். இந்த பணத்திற்கான ஆவணங்கள் எதுவும் இல்லாததால், அந்த பணத்தை அரசு கருவூலத்திற்கு எடுத்து சென்றனர்.
1 கோடி ரூபாய் மதிப்பிலான செல்லாத 2,000 ரூபாய் நோட்டுகள் வைத்திருந்தது குறித்தும், எஞ்சிய பணம் குறித்தும், பைனான்சியர் முருகேசனிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
What's Your Reaction?