வெறுப்பு அரசியலை பாஜக நிறுத்த வேண்டும்; மத்திய அமைச்சரின் பேச்சுக்கு முதலமைச்சர் கண்டனம்!

மத்திய அமைச்சர் ஷோபாவின் வெறுப்புப் பேச்சைக் கவனித்து, தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

Mar 19, 2024 - 21:27
Mar 19, 2024 - 21:28
வெறுப்பு அரசியலை பாஜக நிறுத்த வேண்டும்; மத்திய அமைச்சரின் பேச்சுக்கு முதலமைச்சர் கண்டனம்!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவுக்கு குண்டு வைத்தவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்தான் என்று பேசிய மத்திய அமைச்சர் ஷோபாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வெறுப்புப் பேச்சைத் தமிழர்களும் கன்னடர்களும் புறக்கணிப்பார்கள் என தெரிவித்துள்ளார். 

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் கடந்த 1-ஆம் தேதி ராமேஸ்வரம் கஃபே என்ற உணவகத்தில் குண்டு வெடித்தது. இதில் 9 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து, குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து தேசிய பாதுகாப்பு முகமையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து பேசிய மத்திய இணையமைச்சர் ஷோபா கரந்த்லஜே, சர்ச்சையான கருத்து ஒன்றைத் தெரிவித்தார். 

செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, தமிழ்நாட்டிலிருந்து பெங்களூருவுக்கு வரும் தமிழர்கள், குண்டு வைப்பது போன்ற பயங்கரவாத பயிற்சிகளில் ஈடுபட்டு, குண்டு வைத்து வருகிறார்கள் என்றும், ராமேஸ்வரம் கஃபேவுக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்தான் குண்டு வைத்தார் என்றும் பேசினார். அவரது பேச்சு சர்ச்சையான நிலையில், இணையதளத்தில் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். 

இந்நிலையில், மத்திய இணையமைச்சர் ஷோபா கரந்த்லஜேவின் பொறுப்பற்ற பேச்சுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது எக்ஸ் தள பதிவில், இவ்வாறு பேசுவதற்கு மத்திய அமைச்சர் ஷோபா ஒன்று என்.ஐ.ஏ அதிகாரியாக இருக்க வேண்டும், அல்லது இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு நெருங்கிய தொடர்புடையவராக இருக்க வேண்டும் என சாடியுள்ளார். மேலும், இந்த பிரிவினைவாத பேச்சை நிச்சயம் கன்னடர்களும், தமிழர்களும் நிராகரிப்பார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் அமைதி, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமைக்குக் குந்தகம் விளைவித்ததற்காக ஷோபா மீது தக்க சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாஜகவில் பிரதமர் தொடங்கி தொண்டர்கள் வரையில் அனைவரும் இத்தகைய பிரிவினைவாத அரசியலைச் செய்து வருவதாகக் குறிப்பிட்டு, இதை உடனே நிறுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், ஷோபாவின் இந்த வெறுப்புப் பேச்சைத் தேர்தல் ஆணையம் கவனித்து, அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow