சனாதனத்துக்கு எதிராக பேசியதாக வழக்கு... நீதிமன்றத்தில் உதயநிதி ஆஜர்... உடனே ஜாமீன் வழங்கிய நீதிபதிகள்!

திமுக அங்கம் வகிக்கும் 'இந்தியா' கூட்டணியின் கட்சிகளின் தலைவர்களான மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் சனாதனத்துக்கு ஆதரவு தெரிவித்ததுடன் உதயநிதிக்கும் கண்டனம் தெரிவித்தனர்.

Jun 25, 2024 - 15:36
சனாதனத்துக்கு எதிராக பேசியதாக வழக்கு... நீதிமன்றத்தில் உதயநிதி ஆஜர்... உடனே ஜாமீன் வழங்கிய நீதிபதிகள்!
உதயநிதி

பெங்களூரு: சனாதனத்துக்கு எதிராக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.  

சென்னையில் கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் 'சனாதன ஒழிப்பு மாநாடு' நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 'சனாதனம்' குறித்து சர்ச்சையாக பேசியதாக தெரிகிறது.   

அதாவது, ''சனாதனம் என்பது டெங்கு, மலேரியா போன்றது. அந்த நோய்களை போன்று சனாதனத்தையும் முற்றிலும் ஒழிக்க வேண்டும்'' என்று அவர் பேசியதாக கூறப்படுகிறது. உதயநிதியின் இந்த பேச்சு தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் பேசும்பொருளானது.

தமிழ்நாட்டில் பாஜகவினர், இந்து அமைப்பினர் உதயநிதி தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினார்கள். மேலும் உதயநிதிக்கு கண்டனம் தெரிவித்த பிரதமர் மோடி, சனாதனத்தை யாரும் ஒழிக்க முடியாது என்று கூறினார்.

மேலும் பாஜகவின் மூத்த தலைவர்கள் அமித்ஷா, ஜே.பி.நட்டா, ராஜ்நாத் சிங் உள்பட நாடு முழுவதிலும் இருந்து பாஜகவினர் உதயநிதிக்கு கண்டனம் தெரிவித்தனர். இது தவிர திமுக அங்கம் வகிக்கும் 'இந்தியா' கூட்டணியின் கட்சிகளின் தலைவர்களான மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் சனாதனத்துக்கு ஆதரவு தெரிவித்ததுடன் உதயநிதிக்கும் கண்டனம் தெரிவித்தனர். 

மேலும் சில காங்கிரஸ் தலைவர்களும்  உதயநிதிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வெளிப்படையாகவே சனாதன கொள்கையை ஆதரித்தனர். இது தவிர உதயநிதிக்கு எதிராக பல்வேறு மாநில நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்டது.

இதேபோல் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ.க்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திலும் சனாதனத்துக்கு எதிராக பேசியதாக உதயநிதி மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு முன்பு விசாரணைக்கு வந்தபோது, உதயநிதி நேரில் ஆஜராக நீதிபதிகள் சம்மன் அனுப்பினார்கள். ஆனால் அவர் 2 முறையும் ஆஜராகவில்லை.

மேலும் 25ம் தேதி (இன்று) நீதிமன்றத்தில் ஆஜராக உதயநிதிக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இந்த முறையும் ஆஜராகாமல் இருந்தால் பிடிவாரண்டு பிறப்பிக்கப்படும் என்பதால் உதயநிதி ஸ்டாலின் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.

அப்போது நீதிபதிகள் உதயநிதி ஸ்டாலினுக்கு, ரூ.1 லட்சம் பிணைத்தொகையுடன் கூடிய நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கை ஆகஸ்ட் 8ம் தேதி தள்ளிவைத்தனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow