"Pure veg mode" பச்சை உடை திட்டத்தை கைவிடுகிறோம் - சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சொமேட்டோ சி.இ.ஓ !
இணையத்தில் சாதிய விவாதப்புயலை கிளப்பியதைத் தொடர்ந்து சொமேட்டோவின் "Pure veg mode" நடைமுறையில் பச்சை உடையுடன் சைவ உணவுகளை வழங்கும் திட்டத்தை கைவிடுவதாக அந்நிறுவன சி.இ.ஓ தீபிந்தர் கோயல் அறிவித்துள்ளார்.
பச்சை வண்ண டெலிவரி முறையுடன், உணவை தயாரிக்கும் உணவகம் மட்டுமல்லாது அதனை டெலிவரி செய்யும் பிரதிநிதிகளும் சைவ உணவை மட்டுமே வழங்கும் "Pure veg mode" திட்டத்தை சொமேட்டோ உணவு டெலிவரி நிறுவனம் அறிமுகப்படுத்தியது.
இறைச்சி, மீன், முட்டை போன்ற அசைவ உணவுகளை தயாரிக்கும் உணவகங்களில் இருந்துகூட சைவ உணவுகள் இதன் மூலம் வழங்கப்படாது எனவும் அதிசுத்தமான முறையில் டெலிவரி இருக்கும் எனவும் கூறப்பட்டது. ஒருபுறம் இதற்கு வரவேற்பு இருந்தபோதும், மறுபுறம் அசைவ உணவு மாசுபடுத்தும் என்ற எண்ணம் சாதிவெறியின் அடிப்படையே என எதிர்ப்பும் கிளம்பியது. சுத்தமான வெஜிடேரியன் என்றால் அசைவம் என்பது அசுத்தமான தீண்டத்தகாததா எனவும் பலர் கேள்வியெழுப்பி கண்டனம் தெரிவித்தனர்.
தொடர்ந்து இதுதொடர்பாக X தளத்தில் விளக்கமளித்த சொமேட்டோ சி.இ.ஓ தீபிந்தர் கோயல், "Pure veg mode" நடைமுறைக்கு எந்த மத, அரசியல் ரீதிரியலான காரணங்களும் இல்லை என முன்னதாக குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் தங்களது தளங்களிலேயே சைவ உணவுகளை வழங்குவதால், "Pure veg mode"-ன் படி பச்சை நிறங்களில் அதனை டெலிவரி செய்யும் நடைமுறையை கைவிடுவதாகவும் இனி தங்களது ஊழியர்கள் எந்த வேறுபாடும் இன்றி சிவப்பு நிற உடையையே அணிவர் எனவும் தனது X தளத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். சிவப்பு நிற உடையில் உள்ளபோதும், சைவ - அசைவ உணவுகளை கையாள்வது தொடர்பாக உரிய வழிமுறை வழங்கப்பட்டுள்ளதாகவும் வாடிக்கையாளர்களால் தங்கள் ஊழியர்கள் எந்த பாதிப்பையும் சந்திக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். "Pure veg mode" அறிவிப்பு தொடர்பான எதிர்பாராத விளைவுகளை தங்களுக்கு புரியவைத்ததற்கு நன்றி எனவும் தேவையற்ற அகங்காரமோ பெருமிதமோ இல்லாமல் மக்களின் கருத்தை எப்போதும் கேட்டுக் கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
What's Your Reaction?