ஜெயக்குமார் மகன் ஜெயவர்தன் மீது வழக்குப்பதிவு... தேர்தல் விதிமுறைகளை மீறியதாக புகார்...
தென்சென்னை தொகுதியின் அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகனுமான ஜெயவர்தன் மீது தரமணி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மக்களவைத் தேர்தல் அடுத்த மாதம் 19ம் தேதி முதல் தொடங்கவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. காங்கிரஸ் தவிர்த்து தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட அனைத்துக் கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து, பிரசாரத்தைத் தொடங்கியுள்ளன. நட்சத்திரத் தொகுதியாக பார்க்கப்படும் தென்சென்னை தொகுதியில் திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன், அதிமுக சார்பில் ஜெயவர்தன், பாஜக சார்பில் தமிழிசை சௌந்தராஜன் உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்துள்ளன. அதனடிப்படையில் நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், சென்னை வேளச்சேரியில் விதிகளை மீறி அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தை ஜெயவர்தன் நடத்தியதாகக் கூறி, அவர் மீதும், தனியார் திருமண மண்டப உரிமையாளர் பாலாஜி மீதும் தேர்தல் பறக்கும் படையினர் தரமணி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் படி இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
What's Your Reaction?