IPL திருவிழாவில் இன்று 2 கிடாவிருந்து... பஞ்சாப்பை எதிர்கொள்ளும் டெல்லி... கொல்கத்தாவும் ஐதராபாத்தும் மோதல் !
கோலாகலத்துடன் துவங்கிய 2024 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களுரூ அணியை வீழ்த்தி சென்னை அணி முதல் வெற்றியை பதிவுசெய்தது. இந்நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று 2 போட்டிகள் நடக்கவுள்ளன.
பஞ்சாப் vs டெல்லி (இடம் : சண்டிகர் ) (நேரம் : மாலை 3.30 )
2022ஆம் ஆண்டு கார் விபத்தில் சிக்கி நீண்ட நாட்களாக சர்வதேச போட்டிகளில் விளையாடமல் சிகிச்சை பெற்று வந்த ரிஷப் பண்ட், இந்தாண்டு IPL-ல் ரீ-என்ட்ரி கொடுக்கிறார். அதுமட்டுமின்றி டெல்லி அணியின் கேப்டனாக அவர் களமிறங்குவதால், ரசிகர்கள் முதல் கிரிக்கெட் ஜாம்பவான்கள் வரை அனைவரின் பார்வையும் அவர் பக்கம் திரும்பியிருக்கிறது.
டெல்லி பேட்டிங்கை பொறுத்தவரை, வார்னர், சாய் ஹோப் நம்பிக்கை பேட்ஸ்மென்களாக இருக்கின்றனர். பந்துவீச்சில், அக்ஷர் படேல், குல்தீப் யாதவ் போன்ற பலம் வாய்ந்த ஸ்பின்னர்கள் அணிக்கு கூடுதல் பலம். பஞ்சாப் அணியில் கடந்தாண்டைப் போல ஷீகர் தவானே இந்தாண்டும் அணியை வழிநடத்துகிறார். அணி வீரர்களில் பெரும்பாலான மாற்றங்கள் இல்லை என்பதால் சொதப்பலும் தொடருமா, அல்லது மாற்றம் நிகழுமா என பஞ்சாப் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
கொல்கத்தா vs ஐதராபாத் (இடம்: ஈடன் கார்டன், கொல்கத்தா) (நேரம் : இரவு 7.30 )
2024 IPL போட்டிகளுக்கான மினி ஏலம் நடந்தபோது, இரண்டு ஆஸ்திரேலிய வீரர்களுக்கு அணி நிர்வாகங்கள் போட்டி போட்டு கொண்டன. அதில் முதல் வீரர் மிட்சல் ஸ்டார்க். அவர் IPL வரலாற்றிலேயே அதிகப்படியாக ரூ.24.75 கோடிக்கு கொல்கத்தா அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். அதேபோல, உலக கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ். அவரை ரூ.20.50 கோடிக்கு ஐதராபாத் அணி ஏலத்தில் எடுத்து தனது அணி கேப்டனாக்கி கொண்டது. இந்த 2 வீரர்களும் இடம்பெற்றுள்ள அணிகள் இன்று மோதுவதால் இரு அணியின் ரசிகர்கள் மட்டுமின்றி பிற அணி ரசிகர்களும் போட்டியை எதிர்பார்க்கின்றனர்.
இதில், பேட் கம்மின்ஸ் தலைமையில் பழைய தோல்விகளை மறந்து புது உற்சாகத்துடன் ஐதராபாத் அணி களம் இறங்குகிறது. இதேவேளையில், இந்தியாவின் நம்பிக்கை நாயகனாக உருவாகிக்கொண்டிருக்கும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் ஹோம் கிரவுண்டில் கொல்கத்தா அணி களம் காண்கிறது. இதனால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
What's Your Reaction?