கஞ்சா போதையில் தள்ளாடும் தமிழக இளைஞர்கள்.. கொந்தளிக்கும் எடப்பாடி பழனிச்சாமி
கஞ்சா போதை தகராறு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திமுக அரசு இதை கண்டு கொள்ளவில்லை. காவல்துறை உயர் அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை என்று சட்டசபை எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.
எடப்பாடியில் இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், மக்களவைத் தேர்தல் சுமூகமாக நடைபெற்றது. தேர்தலில் அதிமுக அதிகமான இடங்களில் வெற்றி பெறும் என்று தெரிவித்தார்.
அதிமுக தலைமை கழக முடிவின்படி தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களில் இருந்து பொதுமக்கள் வந்து சென்றபடி உள்ளனர். வெயிலால் பொதுமக்கள் பாதிக்காமல் இருக்கவும் தாகத்தை போக்கவும் நீர்மோர், தண்ணீர் பந்தல்ர திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எப்போதும் கேட்டபடி மத்திய அரசு நிதி கொடுத்தது கிடையாது. புயலால் பாதிக்கப்பட்ட போது கேட்ட நிதி ஒதுக்கப்படவில்லை. மாநில அரசு கேட்ட நிதியை மத்திய அரசு கொடுத்ததில்லை. எவ்வளவு நிவாரணம் வேண்டும் என்று அரசுக்கு தான் தெரியும் எங்களிடம் புள்ளி விவரம் இல்லை. எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளது என அவர்களுக்கு தான் தெரியும். வறட்சி என்பது வேறு புயல் பாதிப்பு என்பது வேறு என்று கூறினார்.
ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது திமுகவினரால் மத்திய அரசிடம் இருந்து நிதி பெற முடியவில்லை. இப்போது எங்கே நிதி பெற முடியும்.
தமிழகத்தை பொறுத்தவரை தேர்தலில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதுவரை இந்த அளவிற்கு வெயில் அடித்தது இல்லை இந்திய அளவில் சேலம் மூன்றாவது இடம் பிடித்திருந்தது. வெப்பம் அதிகரித்து இருந்ததால் பொதுமக்கள் வாக்களிக்க சிரமப்பட்டனர் என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
ஏற்கனவே அதிமுக ஆட்சி காலத்தில் மேட்டூர் அணை தூர்வாரப்பட்டது. அணைக்கட்டப்பட்டு 87 ஆண்டுகள் ஆகிறது வண்டல் மண் அதிகம் தேங்கி இருக்கும். அணையை தூர் வாரினால் மேலும் கூடுதல் தண்ணீரை சேகரிக்கலாம். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு தூர் வாரும் பணியை அரசு கிடப்பில் போட்டு விட்டது.
குடி மராமத்து திட்டத்தை இந்த அரசு தொடரவில்லை. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டம் என்பதால் அரசு தொடர வில்லை இந்த திட்டம் தொடர்ந்து இருந்தால் 8 ஆயிரம் ஏரிகளில் மழை நீரை சேகரித்து இருக்கலாம். கோடையில் இந்த நீர் மக்களுக்கு பயனடைத்திருக்கும்.
மேட்டூர் அணையில் இருந்து 100 ஏரிகளுக்கு நீரேற்றும் திட்டம் கொண்டு வந்தோம் இந்தத் திட்டத்தையும் நிறுத்திவிட்டனர்.
அரசியல் கால்ப்புணர்ச்சி காரணத்தால் இந்த திட்டத்தையும் கிடப்பில் போட்டு விட்டனர். திட்டம் நிறைவேற்றி இருந்தால் ஏரிகளில் தற்போது தண்ணீர் நிரம்பி இருக்கும் .
திமுக ஆட்சியில் எல்லா துறையிலும் குறைபாடு உள்ளது. யாருக்கும் இந்த ஆட்சியில் நன்மை கிடைக்கவில்லை. மாற்றம் வரும் என மக்கள் எதிர்பார்த்தார்கள் ஆனால் மக்கள் கடும் வேதனையையும் துன்பத்தையும் அடைந்திருக்கிறார்கள் என்று எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார்.
சென்னை அம்பத்தூரில் மூன்று வாலிபர்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் ஒரு பெண்ணை கேலி செய்திருக்கிறார்கள். இதை பெண் ஒருவர் கண்டித்து இருக்கிறார் அந்த பெண்ணை தாக்கி இருக்கிறார்கள். தடுக்க வந்தவர்களையும் தாக்கி இருக்கிறார்கள். இதில் 12 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இப்படித்தான் தினமும் நடந்து வருகிறது.
கஞ்சா போதை தகராறு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால் இந்த அரசு இதை கண்டு கொள்ளவில்லை. காவல்துறை உயர் அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை. இன்று தமிழகம் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது அதிமுக ஆட்சியில் சட்டத்தின் ஆட்சி நடந்தது. திமுக ஆட்சி காலத்தில் போதையால் குடும்பம் சீரழிகிறது இதை அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். ஆனால் அரசு கண்டு கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டினார் எடப்பாடி பழனிச்சாமி.
திமுகவில் உள்ள கூட்டணியினர் மக்களின் பிரச்சினைகளை எடுத்து கூறுவது இல்லை அப்போதுதான் அரசு அதை தடுத்து நிறுத்த முடியும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?